×

#BREAKING ரூ. 20 கோடி செலுத்தாவிடில் ஜெயலலிதா சொத்துகள் ஏலம் விடப்படும்-ஐ.டி. எச்சரிக்கை

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து, 20 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும், வரி பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என, வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி, 13 கோடி  ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்-கும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வரி பாக்கி குறித்து பதில்மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு   உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்,  அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வருமான வரித்துறை சார்பில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி குறித்து பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2026 ஜனவரி 31 ம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 17 ஆயிரத்து 962 ரூபாயும், செல்வ வரி பாக்கி 11 கோடியே 8 லட்சத்து 8 ஆயிரத்து 730 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக், 6 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரத்து 342 ரூபாயை ஆறு தவணைகளாக செலுத்துவதாகக் கூறி, ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளதாகவும் வருமான வரித்துறை பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.வரி பாக்கிக்காக, ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே சில சொத்துக்கள் முடக்கப்பட்டன. வரி பாக்கியை செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு, பிப்ரவரி 18 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.