×

"ஜெயலலிதா தமிழகத்தின் விலைமதிப்பற்ற சொத்து!" - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கம்..!

 

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு மனதின் குரல் என்ற தலைப்பில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று 131-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து வெகுவாக புகழ்ந்து பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பிரமரின் மோடியின் பேச்சு வருமாறு, "நம் தேசத்தில் சமூக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபட்டவர்கள் எப்போதும் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறார்கள். அதில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அதில் ஒருவர். மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் தலைவரான ஜெயலலிதாவின் பிறந்த தினம் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நான் தமிழகம் செல்லும் போதெல்லாம் மக்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பை கண்டு வருகிறேன்.

அவர் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது தாய்மார்கள், மகளிர் நலனுக்காக பல பாராட்டத்தக்க மக்கள் நல திட்டங்கள் மற்றும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். சிறந்த தேசபக்தி உணர்வு கொண்டவர். இந்தியாவில் கலாச்சார பாரம்பரியத்தை போற்றி பெருமைப்பட்டார்.

அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் ஒவ்வொரு உரையாடலும் என் மனதில் இன்றும் நிழலாடுகிறது. கடந்த 2002 மற்றும் 2012இல் நான் குஜராத் முதல்வராக பதவியேற்ற போது அந்த விழாவில் அவர் கலந்துகொண்டார். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சராக இருந்தபோது நல்லாட்சி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து உண்டு. அவரது சிந்தனை மிக தெளிவானதாக இருக்கும். இது அவரிடம் மட்டுமே உள்ள சிறப்பான விஷயமாகும்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு பொங்கல் கொண்டாட்டத்தின் போது என்னை மதிய உணவுக்காக அவர் சென்னைக்கு அழைத்தார். அந்த அன்பை என்னால் எப்போதும் மறக்க முடியாது. சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும். அவர் தமிழ்நாட்டின் சொத்துக்களில் முக்கியமானவர். தமிழக மக்கள் மனங்களில் அவர் இன்றும் வாழ்ந்து வருகிறார். அவரை இந்த நன்னாளில் நினைவு கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.