ஹைட்ரோகார்பன் திட்டத்தில் முதல்வர் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் - ஜவாஹிருல்லா
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க வழங்கப்பட்ட சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம், உழவர் நிலங்களுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் தீவிரப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மண் மற்றும் நீரின் தன்மைகளை மீட்க முடியாத அளவில் பாழ்படுத்தும். 2020 ஆம் ஆண்டின் காவிரி வடிநிலம் பாதுகாப்பு சட்டம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்ற பகுதிகளுக்குச் சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தச் சட்டத்தை மீறி, ஓஎன்ஜிசி இப்படி புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கான செயல்முறை தவறானதாகும்.
பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் திமுக அரசு நியமித்த நிபுணர் குழு 2022 ஆம் ஆண்டு, ஹைட்ரோகார்பன் கிணறுகள் சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் மாசு விளைவிக்கும் என அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கையை உடனே வெளியிட்டு, அதன்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு ரத்து செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எரிபொருள் ஆராய்ச்சி உ ரிமம் Petroleum Exploration License (PEL) அனுமதி வழங்கக்கூடாது. பேராசிரியர் சுல்தான் இஸ் மாயில் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே செயல்படும் ஹைட்ரோகார்பன் கிணறுகளின் செயல்பாடுகளையும் முடக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.