×

"முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் ஒரு மூடு மந்திரம்" - ஜவாஹிருல்லா

 

பிரதமர் நரேந்திர மோடியின் பாணியை தமிழக முதலமைச்சரும் பின்பற்றுவதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “ஒரு முதலமைச்சர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது, என்ன நோக்கத்திற்காக வெளிநாடு செல்கிறோம் என்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார். ஆனால், இந்த முதலமைச்சர், நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் கலந்துகொள்ளும் கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக சென்றிருக்கிறார். அதற்காக சென்றதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக செல்வதாக கூறிவிட்டு, எந்தெந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லாத நிலையில், அவருடைய பயணம் ஒரு 'மூடு மந்திரமாக' உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பாணியை தமிழக முதலமைச்சரும் பின்பற்றுகிறார். பிரதமர் மோடி துறை ரீதியான கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார். மற்ற அமைச்சர்கள்தான் பதில் அளிப்பார்கள். இதைத்தான் இந்த சட்டமன்றத்திலும் பல நாட்களாகப் பார்த்து வருகிறோம். பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டார். அதே அடிப்படையில்தான் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடும் இருக்கிறது. எனவே, மோடி எந்த வழியில் செல்கிறாரோ, அதே வழியில்தான் விஜய்யும் தடம் மாறாமல் செல்கிறார்” என்றார்.