அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது தேச விரோதமோ, நக்சலிசமோ அல்ல- ஜவாஹிருல்லா
விடுதலை திருநாள் உரையில் பிரதமர் மோடியின் பொறுப்பற்ற பேச்சு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இதுதொடர்பாகமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, “நக்சல் மனநிலை கொண்டவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது விடுதலை திருநாள் உரையில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் கருத்து வேறுபாடு கொண்டவர்கள், அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள், சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவரையும் “நக்சல் மனநிலை” கொண்டவர்கள் என முத்திரை குத்துவது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரத்தையும், அமைதியாகப் போராடும் உரிமையையும் வழங்கியுள்ளது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது தேச விரோதமோ, நக்சலிசமோ அல்ல. அரசை விமர்சிப்பவர்களை எதிரிகளாக சித்தரிப்பது ஜனநாயக ஆட்சியின் அடையாளம் அல்ல.
பிரதமர் பதவியில் இருப்பவர் தனது அரசியல் எதிரிகளையும், மாணவர்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும், அறிவுஜீவிகளையும் ஒரே வார்த்தையில் சந்தேகத்திற்குரியவர்களாக சித்தரிப்பது மிகவும் ஆபத்தான போக்காகும். கடந்த காலங்களில் “தேச விரோதி”, “நகர்ப்புற நக்சல்” போன்ற சொற்கள் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை மிரட்டவும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சொற்களை பிரதமரே பயன்படுத்துவது, விமர்சனக் குரல்களை ஒடுக்குவதற்கான அரசியல் சூழலை மேலும் வலுப்படுத்தும். நக்சலிசத்தை எதிர்ப்பதற்கும், ஜனநாயகக் கருத்து வேறுபாடுகளை எதிர்ப்பதற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்த அடிப்படை வேறுபாட்டை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் பல்வகைத் தன்மை, கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, சமூகநீதி மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதுதான் இன்று அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். மாறாக, தன்னை விமர்சிப்பவர்கள் அனைவரையும் ஒரே குற்றச்சாட்டின் கீழ் கொண்டு வருவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பற்ற கருத்தை திரும்பப் பெறுவதுடன், ஜனநாயக ரீதியாக அரசை விமர்சிக்கும் மக்களின் உரிமையை மதிக்க வேண்டும். கருத்து வேறுபாடு கொண்ட ஒவ்வொருவரையும் எதிரியாகப் பார்க்கும் மனநிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜனநாயகத்தில் ஆட்சியாளர்களை கேள்வி கேட்பது குற்றமல்ல; கேள்வி கேட்கும் உரிமையைப் பாதுகாப்பதே உண்மையான தேசப்பற்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.