×

 நாளை கரையை கடக்கிறது ஜவாத் புயல் - ரெட் அலர்ட் எச்சரிக்கை!!

 

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.   மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று,  வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா -தெற்கு ஒடிசா கடலோர பகுதியை இன்று காலை நெருங்க கூடும் . அதைத் தொடர்ந்து வடக்கு வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி நண்பகலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.  இதற்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது.  இன்று காலை ஆந்திரா  மற்றும் ஒடிசா கடற்கரையில் தொடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது திசை மாறி வடக்கு - வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து,  ஒடிசாவின் புரி நோக்கி செல்லும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது.இந்தப் புயல் நாளை  பிற்பகல் ஒடிசா மாநிலம், புரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா மாநிலங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜாவத்  புயல் காரணமாக வடக்கு ஆந்திரா - ஒரிசா பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அத்துடன்  ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ,விசாகப்பட்டினம், ஒடிசாவின் கஞ்சம் , புரி,ஜெகநாத் மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புயல் காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் 65 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பாம்பன், நாகை, கடலூர் ,புதுச்சேரி ,காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.