×

ஜன நாயகன் வெளியீட்டால் தள்ளிப்போகும் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா?

 

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், எதிர்பாராத தணிக்கைச் சான்றிதழ் சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகள் காரணமாக இதன் வெளியீடு தள்ளிப்போனது.

இதற்கிடையே படம் இணையத்தில் கசிந்த சம்பவமும் படக்குழுவினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தற்போது இப்படத்திற்குச் ‘சென்சார்’ சான்றிதழ் வழங்கத் தணிக்கைக் குழு ஒப்புக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், இழுபறியில் இருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.

ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படமான சிக்மா ஜூலை 31 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜன நாயகன் வெளியீட்டின் காரணமாக சிக்மா பட வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜன நாயகன் திரைப்படம் வெளியானால் சில வாரங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், சிக்மா திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டுவர தயாரிப்பு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.