×

மல்லிகை கிலோ 10,000 ரூபாய்! மலர் சந்தையில் வரலாறு காணாத விலை உயர்வு!

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலை மலர் சாகுபடிக்கு மிகவும் உகந்தது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக அதிகாலை நேரங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைச் செடிகளில் அரும்புகள் கருகி வருகின்றன. இதனால் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முன்பு 20 கிலோ பூக்கள் கிடைத்த தோட்டத்தில், தற்போது வெறும் 200 கிராம் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மல்லிகை விளைச்சல் குறைந்ததால், நிலக்கோட்டை மலர் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து அடியோடு சரிந்துள்ளது. அதே சமயம், சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு மல்லிகைப் பூக்களை ஏற்றுமதி செய்ய விற்பனையாளர்கள் ஏற்கனவே அதிக அளவில் ஆர்டர்களைப் பெற்றுள்ளனர். வரத்து குறைவு மற்றும் வெளிநாட்டுத் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், சந்தையில் மல்லிகைப் பூக்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்று நிலக்கோட்டை சந்தையில் மல்லிகைப் பூவின் விலை ஒரு கிலோ ரூபாய் 10,000-ஐத் தாண்டியது. பூக்கள் போதிய அளவு கிடைக்காததால், வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய பல ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், செடியிலிருந்து பறிக்கப்படும் அரும்பு மொட்டுக்கள் கிலோ ரூ. 5,000 முதல் ரூ. 7,500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. வரத்து இன்னும் குறைந்தால் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் கணிக்கின்றனர்.

மல்லிகையைத் தொடர்ந்து முல்லைப் பூ கிலோ ரூ. 1,800-க்கும், பிச்சிப் பூ கிலோ ரூ. 1,600-க்கும் விற்பனையாகின்றன. விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்திருந்தாலும், கொண்டு வரப்படும் குறைந்த அளவு பூக்களுக்குக் கூடுதல் விலை கிடைப்பதால், நஷ்டத்தை ஓரளவுக்குச் ஈடுகட்ட முடிவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.