ரூ.200 பிரீமியத்தில் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கும் "ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டம்"..!
ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டம் என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழமும் (LIC) இணைந்து இந்திய அரசாங்கத்தால் 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்த திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களுக்கு குறைந்த பிரீமியத்தில் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குகிறது. இது சுமார் 45 வகை தொழிலாளர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கி, அவர்களின் பணக் கவலையை குறைக்கிறது.
இது எல்ஐசி உடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள ஒரு அரசு காப்பீட்டுத் திட்டமாகும். வறுமைக் கோட்டிற்கு கீழ் மற்றும் வறுமைக் கோட்டிற்கு சற்று மேலே உள்ளவர்களை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட இந்த காப்பீட்டு திட்டத்தில் ஒரு நபருக்கான பிரீமியம் ரூ.200 ஆகும்.
சுய உதவிக் குழுக்கள் மற்றும் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அல்லது மாநில அரசு போன்ற நோடல் ஏஜென்சிகளின் உறுப்பினர்கள் பிரீமியத் தொகையில் 50% ஐ செலுத்த வேண்டும். மீதமுள்ள பிரீமியத் தொகையை சமூக பாதுகாப்பு நிதியம் செலுத்துகிறது.
அதேபோல், இந்த திட்டத்தில் பெண் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக ஒரு சிறப்பு திட்டமும் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஒரு வருடத்திற்கு ரூ.30 ஆயிரம் நிதியுதவியாக பெண் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன், பெண் உறுப்பினர் ஆண்டுக்கு ரூ.200 பிரீமியத்தை செலுத்தினாலும், அதில் ரூ.100 ஐ எல்ஐசி செலுத்துகிறது.
இதுமட்டுமல்லாமல், ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்தில் சிக்ஷா சஹ்யோக் யோஜனா எனப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் பாலிசிதாரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2 குழந்தைகள் மட்டுமே கல்வி உதவித்தொகை பலன்களை பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும், வீட்டுப் பணியாளராக பணியாற்றும் பெண்கள் இந்த திட்டத்தில் பாலிசி எடுத்தால், அவர்களுக்கு மகப்பேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரசவத்திற்கும் அதிகபட்சமாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. இந்த சலுகை 2 பிரசவங்கள் வரை கிடைக்கும்.
அதேபோல், இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்ற ஒரு பெண்ணுக்கு மார்பகம், கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள் அல்லது இனப்பெருக்க அமைப்பின் எந்தப் பகுதியிலும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த பெண் தனது சிகிச்சைக்காக ரூ.20,000 பெறலாம்.
ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்தின் நன்மைகள்
இந்த திட்டத்தின் கீழ், பாலிசி எடுக்கும் பாலிசிதாரர் இயற்கையாக மரணமடைந்துவிட்டால் சட்டப்பூர்வ வாரிசுக்கு ரூ.30,000 கிடைக்கும். பாலிசிதாரர் விபத்து காரணமாக மரணமடைந்தால், சட்டப்பூர்வ வாரிசுக்கு ரூ.75,000 கிடைக்கும். அதேப்போல், விபத்தால் நிரந்த ஊனம் ஏற்பட்டால் பாலிதாரருக்கு இழப்பீடாக ரூ.75,000 வழங்கப்படும்.
விபத்தின் காரணமாக இரண்டு கைகள், கண்கள் மற்றும் கால்களை இழந்தால் பாலிதாரருக்கு இழப்பீடாக ரூ.75,000 வழங்கப்படும் அல்லது ஒரு கண், கை மற்றும் காலை இழந்தால் பாலிதாரருக்கு இழப்பீடாக ரூ.37,500 வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் காப்பீடு பாதுகாப்பு வழங்குவதோடு, பாலிசிதாரரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு உதவித்தொகையாக 6 மாதத்திற்கு ஒரு முறை ரூ.600 வழங்கப்படுகிறது.
ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்திற்கான தகுதி வரம்புகள்
ஜனஸ்ரீ பீமா யோஜனா பாலிசிக்கு 18 முதல் 59 வயதுகுட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், அவர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவராகவோ அல்லது வறுமைக் கோட்டிற்கு சற்று மேலே உள்ளவராகவோ இருக்க வேண்டும்.அதேபோல், விண்ணப்பதாரர் ஒரு சுய உதவிக்குழு (SHG) மற்றும் மாநில அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்கள் போன்ற நோடல் ஏஜென்சிகளின் உறுப்பினராக இருக்க வேண்டும். அந்த சுய உதவிக் குழுவில் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 ஆக இருக்க வேண்டும்.
ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள் :
இந்த திட்டத்தின் கீழ் பாலிசிக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், பாலிசியை எடுக்கும் போதும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பாலிசிக்கு விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை?
- சுய உதவிக்குழு (SHG) மற்றும் மாநில அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்கள் போன்ற நோடல் ஏஜென்சிகளின் உறுப்பினர் என்பதற்கான சான்று
- வருமானச் சான்றிதழ்
- ஆதார் அட்டை
- தொழில் சான்று
- பிறப்புச் சான்றிதழ்
- ரேஷன் கார்டு
- வாக்காளர் அடையாள அட்டை அல்லது வாக்காளர் பட்டியலின் நகல்
- வங்கி பாஸ்புக் நகல்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
உரிமை கோருவதற்கு என்ன ஆவணங்கள் தேவை?
முறையாக நிரப்பப்பட்ட உரிமைக்கோரல் படிவத்தோடு பின்வரும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இயற்கையான மரணமாக இருந்தால், நோடல் ஏஜென்சியால் சான்றளிக்கப்பட்ட இறப்புச் சான்றிதழின் நகல் அல்லது மருத்துவரிடமிருந்து இறப்புச் சான்றிதழ், நாமினி அல்லது வாரிசுதாரரின் பேங்க் பாஸ்புக் நகல், பாலிசி ஆவணம்.
விபத்தில் மரணம் ஏற்பட்டால், எஃப்ஐஆர் நகல், பிரேத பரிசோதனை அறிக்கை, காவல் விசாரணை அறிக்கையின் நகல், வாரிசு அல்லது நாமினியின் பேங்க் பாஸ்புக் நகல், பாலிசி ஆவணம்.
விபத்தால் பகுதியளவு ஊனம் அல்லது முழு ஊனம் ஏற்பட்டால் அதற்கான சான்றிதழ், ஹாஸ்பிட்டல் டிஸ்சார்ஜ் ரசீது, எஃப்ஐஆர் நகல், பாலிசிதாரரின் பேங்க் பாஸ்புக் நகல், பாலிசி ஆவணம்.
ஜனஸ்ரீ பீமா யோஜனா பாலிசிக்கு யார் தகுதியானவர்?
இந்த திட்டத்தின் கீழ் பின்வரும் அனைவரும் பாலிசி எடுக்க தகுதியானவர்கள் ஆவர்.
- விவசாயிகள்
- செங்கல் சூளை தொழிலாளர்கள்
- பீடி தொழிலாளர்கள்
- தோட்டத் தொழிலாளர்கள்
- மீனவர்கள்
- காகிதப் பொருட்கள் உற்பத்தியாளர்கள்
- விசைத்தறி தொழிலாளர்கள்
- உடல் ஊனமுற்று சுயதொழில் செய்பவர்கள்
- தச்சர்கள்
- மண் பொம்மைகள் உற்பத்தியாளர்கள்
- தேங்காய் பதப்படுத்துபவர்கள்
- அச்சு இயந்திரத் தொழிலாளர்கள்
- கிராமப்புற ஏழைகள்
- நகர்ப்புற ஏழைகள்
- முதன்மை பால் உற்பத்தியாளர்கள்
- கட்டுமானத் தொழிலாளர்கள்
- பட்டாசு தொழிலாளர்கள்
- துப்புரவுத் தொழிலாளர்கள்
- செருப்பு தைப்பவர்கள்
- உப்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
- ரிக்ஷா இழுப்பவர்கள்/ஆட்டோ ஓட்டுநர்கள்
- கைத்தறி நெசவாளர்கள்
- மலைப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள்
- கைத்தறி மற்றும் காதி நெசவாளர்கள்
- கள் தட்டுபவர்கள்
- ஜவுளித் தொழிலாளர்கள்
- நீட்டப்பட்ட இலை சேகரிப்பாளர்கள்
- வனத்துறை ஊழியர்கள்
- கைவினைக் கலைஞர்கள்
- ஹமால்கள் (பழங்குடி)
- பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
- செம்மறி ஆடு வளர்ப்பவர்கள்
- போக்குவரத்து ஓட்டுநர்கள் சங்க உறுப்பினர்கள்
- கோட்வால்ஸ்
- சுய உதவிக் குழு உறுப்பினர்கள்
- தோல் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
- பெண்கள் தையல்காரர்கள்
- தோல் பதனிடும் தொழிற்சாலை தொழிலாளர்கள்
- துப்புரவுத் தொழிலாளர்கள் அல்லது தூய்மைப் பணியாளர்கள்
- உணவுப் பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
- சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
- ரப்பர் மற்றும் நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
- ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
- எஸ்.இ.டபிள்யூ.ஏ (SEWA) உடன் தொடர்புடைய அப்பளத் தொழிலாளர்கள்
ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
வறுமைக் கோட்டிற்குக் கீழே அல்லது சற்று மேலே உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற தொழிலாளர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு, உங்கள் பகுதியில் உள்ள நோடல் ஏஜென்சி அல்லது உள்ளூர் சுய உதவிக்குழு, கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப்பிக்கலாம். இல்லையென்றால், எல்ஐசி அலுவலகத்துக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
அங்கு, இத்திட்டத்துக்கான விண்ணப்பப் படிவத்தை கேட்டு வாங்கிக் கொள்ளவும். பின்னர், தேவையான அனைத்து தனிப்பட்ட மற்றும் தொழில் விவரங்களையும் பிழையில்லாமல் நிரப்பவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்கள் மற்றும் பாலிசிக்கான பிரீமியம் தொகை ரூ.200 ஆகியவற்றையும் சேர்த்து சமர்ப்பிக்கவும். நோடல் ஏஜென்சி உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, LIC-க்கு ஒப்புதலுக்காக அனுப்பும். ஒப்புதல் அளிக்கப்பட்டதும், ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்துக்கான காப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
ஜனஸ்ரீ பீமா யோஜனா பாலிசியின் நன்மைகளை எவ்வாறு பெறுவது?
பாலிசியின் நன்மையை பெற முதலில் நீங்க விண்ணப்பித்த நோடல் ஏஜென்சியை அணுக வேண்டும். அங்கு, ஜனஸ்ரீ பீமா யோஜனா உரிமைகோரல் படிவத்தை (Claim Form) கேட்டுப் பெற்றுக் கொள்ளவும். படிவத்தில் அனைத்து விவரங்களையும் கவனமாக நிரப்பி, உரிய ஆவணங்களை உடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நோடல் ஏஜென்சி உங்கள் ஆவணங்களையும் க்ளைம் காரணத்தையும் சரிபார்க்கும். சரிபார்க்கப்பட்டவுடன், நோடல் ஏஜென்சி உரிமைகோரல் படிவத்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு (LIC) அனுப்பும். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் விவரங்களும் சரியாக இருந்தால், காப்பீட்டுத் தொகை நேரடியாக வாரிசுதாரர்களுக்கு அல்லது நாமினி அல்லது பாலிசிதாரரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.