ஜனநாயகன் படத்தை இணையதளங்கள்,கேபிள் டிவிக்களில் வெளியிட ஐகோர்ட் தடை
ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளங்கள்,கேபிள் டிவிக்களில் சட்டவிரோதமாக வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் விஜய் தனது கடைசி படம் என அறிவித்து நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் ராணுவம் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி, சென்சார் போர்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக படத்துக்கு சான்று வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, படத்துக்கு உடனடியாக சான்று வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய பட தயாரிப்பு தரப்பு, தனி நீதிபதி முன் நிலுவையில் இருந்த வழக்கை திரும்பப் பெற்றது.
சென்சார் போர்டின் மறு ஆய்வு குழு ஆய்வில் படம் இருந்தது. இந்நிலையில், ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரைப்பட சான்றிதழ் வாரியம் இன்னமும் சான்றிதழ் வழங்கவில்லை என்றும் ஆனால் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ,ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களிலிலோ,கேபிள் டிவிக்களிலோ வெளியிட தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை ஜூன் 2 ம் தேதி ஒத்திவைத்தார்.