×

"ஜானகி அம்மையாரின் 100-வது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்" - சசிகலா 

 

ஜானகி அம்மையாரின்  100-வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப்  போற்றி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சசிகலா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், "பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான திருமதி வி.என்.ஜானகி அம்மையார் அவர்களின் 100-வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப்  போற்றி, அதனைக் கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரைத்துறையில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஜானகி அம்மையார் அவர்கள்  புரட்சித்தலைவரோடும் ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி உள்ளிட்ட படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியபோது, ஜானகி அம்மையார் அவர்கள் தனது வருமானத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் வாங்கிய வீட்டை, புரட்சித்தலைவருக்கு கொடுத்ததையும், இந்த இடத்தில்தான், தற்போது, நம் கட்சியின் தலைமைக் கழகம் செயல்பட்டு வருகிறது என்பதையும், இந்நேரத்தில் பெருமையுடன் நினைத்து பார்க்கிறேன்.

புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள், புரட்சித்தலைவியின் வழிவந்த அன்புத் தொண்டர்கள் சார்பாகவும், அம்மையார் வி.என். ஜானகி அவர்களின் 100-வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில், அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டுமென, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.