இதுதான் வசதியா? ஜன் சதாப்தி ரயில் பயணிகள் காட்டம்
சூப்பர் பாஸ்ட் ஜன் சதாப்தி (Jan Shatabdi) ரயில்களில் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் இருக்கைகள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதிய பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் நேராக இருப்பதால் நீண்ட நேரம் அமர்வது கடினமாக இருப்பதாகவும், குறிப்பாக வயதானவர்கள் பயணிக்க மிகவும் சிரமப்படுவதாகவும் பயணிகள் செய்திக்கதிரிடம் தெரிவித்தனர். சில ரயில்களில் இருந்த பழைய சாய்வு வசதி கொண்ட இருக்கைகள் பயணத்திற்கு வசதியாக இருந்ததாகவும், புதிய இருக்கைகளில் நீண்ட தூரம் பயணித்தால் முதுகு வலி ஏற்படுவதாகவும் அவர்கள் கூறினர். வைகை எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் சில பெட்டிகளில் சாய்வு இருக்கைகள் இருப்பதால் பயணம் சற்றே வசதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஜன் சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் பழைய மாதிரியான சாய்வு இருக்கைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.