×

பழைய காட்பாடியில் ஜல்லிக்கட்டு பாணியில் எருது விழா!15 பேருக்கு காயம்..!
 

 

வேலூர் பழைய காட்பாடி பகுதியில் ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் ஸ்ரீ கோட்டையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் 76-வது ஆண்டு விழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் வேலூர், திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் இருந்தும் மொத்தம் 219 காளைகள் பங்கேற்றன.

விழா தொடங்கி, வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இலக்கை குறைந்த நேரத்தில் அடைந்த காளைகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி முதல் பரிசாக ரூ.1,11,000, இரண்டாவது பரிசாக ரூ.90,001, மூன்றாவது பரிசாக ரூ.80,001, நான்காவது பரிசாக ரூ.70,001 வழங்கப்பட்டது. மொத்தம் 67 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

எருது விடும் நிகழ்ச்சியை காண சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டனர். மேலும் அருகிலுள்ள வீடுகளின் மொட்டைமாடி மற்றும் மேல்தளங்களில் நின்று பொதுமக்கள் ஆரவாரம் செய்து காளைகள் வேகமாக ஓட உற்சாகக் கூச்சலிட்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது காளைகள் முட்டியதில் 11 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்ததால் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.