×

பாலமேட்டில் 21 காளைகளை அடக்கிய "ஹாட்ரிக்" நாயகன்... முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை! 

 

பொங்கல் என்று வந்துவிட்டால் ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனி மவுசு உண்டு. மதுரை மாவட்டமே களைகட்டும். உலகப் புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு தான் காரணம். அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரபலமானவை தான். இவை தவிர மதுரைச் சுற்றியுள்ள திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஜனவரி 14-இல் அவனியாபுரம், 15-இல் பாலமேடு, 17-இல்அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி வழங்கியது. அதன்படி 300 மாடிபிடி வீரர்கள், 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் பெயர், புகைப்படம், வயது சான்றிதழ், கொரானா தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என மதுரை ஆட்சியர் அறிவித்திருந்தார்.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நடைமுறைகள் அனைத்துமே டிஜிட்டல் வடிவில் செயல்படுத்தப்பட்டன. அந்த வகையில் இன்று பாலமேட்டில் இன்று 7 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். 7 சுற்றுகளின் முடிவில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்தவர் என்பது கவனிக்கத்தக்கது. 


மதுரை மாவட்டம் பொதும்பை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் டிரைவராக வேலை செஞ்சிட்டு இருக்கேன். நான் போன வருஷமே கேட்டேன். அரசு வேலை கொடுத்தா நல்லா இருக்கும்னு. இந்த தடவை அரசு வேலை கொடுத்தால் நல்லா இருக்கும். முதல்வர் ஒரு முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கொடுத்தால் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இன்னும் நிறைய வீரர்கள் வளர்வார்கள். எனக்கு இந்த தடவை அரசு வேலை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் பார்ப்போம். எல்லோரும் நினைக்கிறார்கள் மாடுகளை பிடிப்பது காலி பசங்கன்னு. இது காலி பசங்க பிடிக்கிறது கிடையாது" என்றார்.