×

தமிழர்களின் பாரம்பரியம் : நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி..!

 

உலகப் புகழ்பெற்ற மதுரையின் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தை மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ளன. இதன்படி, ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16-ஆம் தேதி பாலமேட்டிலும், 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு மதுரையில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியான அவனியாபுரம் போட்டிக்காக, சுமார் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் பிரம்மாண்ட விழா மேடை, காளைகள் வரிசைப்படுத்தும் தடுப்பு வேலிகள் மற்றும் திருப்பரங்குன்றம் சாலையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

காளைகளும் வீரர்களும் காயமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய, வாடிவாசல் மற்றும் ஓடும் பாதைகளில் தேங்காய் நார் பரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகளை மதுரை மாநகராட்சி செய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டைவிட அதிக காளைகளைக் களமிறக்கும் வகையில் பிரத்யேகமான 'தள்ளுவாடி' வாடிவாசல் அமைக்கப்பட்டு, அதற்கான வண்ணம் தீட்டும் பணிகளும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாக்களில் மிக முக்கிய நிகழ்வாக, ஜனவரி 16-ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறும் போட்டியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 17-ஆம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன.