ஜல்லிக்கட்டு போட்டியில் நேர்ந்த விபத்து: காளை முட்டியதில் பள்ளிச் சிறுவன் உயிரிழப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குலமங்களம் மலையக் கோவிலில் கடந்த 2 ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது ஜல்லிக்கட்டு நிறைவடைந்து இருந்த நிலையில் அட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த காளைகள் வீரர்கள் இல்லாமல் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டது.
அப்போது அவிழ்க்கப்பட்ட ஒரு காளை வாடிவாசலில் இருந்து வெளியேறி கலெக்சன் பாயிண்ட் என்று சொல்லக்கூடிய காளைகள் வெளியேறும் பகுதியில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த இளம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையா என்ற 17 வயது சிறுவனை கூர்மையான கொம்புகளால் குத்தி வீசியது.
இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சின்னையாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்கேயே அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கு சிகிச்சை மேற்கொண்ட சின்னையாவுக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்டதால் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையில் சிறுவன் சின்னையா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.