×

சீறும் காளைகள்... பாயும் வீரர்கள் - ஜல்லிக்கட்டு முன்பதிவு தொடங்கும் நேரம் அறிவிப்பு!

 

பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என பெரிய சந்தேகம் எழுந்தது. அதற்குக் காரணம் திடீரென உச்சம் பெற்ற கொரோனா பரவல். ஆனால் அப்படியெல்லாம் சந்தேகம் வேண்டாம். நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும் என மதுரையைச் சேர்ந்த அமைச்சர் பி.மூர்த்தி உறுதிப்பட தெரிவித்தார். அந்த வகையில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி 300 மாடிபிடி வீரர்கள், 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

2 நாட்களுக்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் ஜனவரி 14-இல் அவனியாபுரம், 15-இல் பாலமேடு, 16-இல்அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் பெயர், புகைப்படம், வயது சான்றிதழ், கொரானா தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இதுபோன்று காளைகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே அனுமதிக்கப்படும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றுக்கான முன்பதிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.