சூரியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு- முதலிடம் பிடித்தவருக்கு கார் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சூரியூரை சேர்ந்த மூர்த்தி என்பவர் முதலிடம் பிடித்து கார் பரிசு பெற்றார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளான மாட்டு பொங்கல் அன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியான சூரியூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. போட்டியை இன்று காலை மாவட்ட ஆட்சியர் சரவணன் வீரர்களோடு உறுதிமொழி எடுத்து துவக்கி வைத்தார். இப்போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகளும், மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5.30 க்கு நிறைவடைந்தது. இதில் 668 காளைகள் களம் இறக்கப்பட்டன. 334 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 13 மாடுகளை பிடித்து சூரியூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் முதலிடம் பிடித்தார் அவருக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. 11 காளைகளை பிடித்து இரண்டாம் இடத்தை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த யோகேந்திரன் என்பவர் பிடித்தார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக திருச்சி மாவட்டம் ஓலையூரை சேர்ந்த மூர்த்தி என்பவர் காளை தேர்வு செய்யப்பட்டது. அதற்கு இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுபிடி வீரர்கள் 12 பேரும் பார்வையாளர்கள் 22 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 26 பேரும் இரண்டு காவலர்கள் என மொத்தம் 62 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் மேல் சிகிச்சைக்காக எட்டு பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூரியூரில் முதன்முறையாக நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.