×

பிப்.8-ல் சென்னையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா: ஜாக்டோ ஜியோ

 

உறுதி அளிக்கப்பட்ட பென்சனை அறிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஜாக்டோ- ஜியோ சார்பில் பாராட்டு விழா நடத்தவிருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைமை அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜாக்டோ ஜியோ வின் உடைய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சென்னை கட்டிடத்தில் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோவின் தொடர் போராட்டத்தின் விளைவாக ஒரு கால் நூற்றாண்டின் யுத்தகள போராட்டத்தில், வாழ்வாதார பென்ஷனை மீட்டெடுக்கின்ற களப்போராட்டத்தில் விளைவாக, தமிழ்நாட்டு முதலமைச்சர் எங்களது பிரதான கோரிக்கையை ஏற்று உறுதி அளிக்கப்பட்ட பென்சனை அறிவித்திருப்பது என்பது ஜாக்டோ ஜியோவின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். கடந்த காலங்களில் எண்ணற்ற தியாகங்களையும் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளுக்கெல்லாம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தக் கூட்டத்தின் இலக்காக, நேரடியாக தமிழ்நாடு முதலமைச்சர் 3 தேதி அறிவித்த அறிவிப்பில் நாங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும், குறிப்பாக உறுதி அளிக்கப்பட்டு பென்ஷன் திட்டம் கிட்டத்தட்ட 46 ஆயிரம் ஆசிரியர் அரசு ஊழியர்கள், 2003 க்கு பிறகு பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒரு வாழ்வாதாரத்தை அளித்து இருக்கின்ற அந்த நிகழ்வையும், கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதற்கு உட்பட்ட காலத்தில் இறப்புக்கு உள்ளான ஊழியர்களுக்கும் ஒரு கருணைத் தொகையை அறிவித்திருந்ததை ஜாக்டோ ஜியோ வரவேற்றது.

ஜாக்டோ ஜியோ பத்து ஆண்டுகளுக்கு மேலாக பயணித்தும் சத்துணவு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்டும் 80 விழுக்காடு பென்சனை அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி அந்த மகிழ்ச்சியையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். பகுதி நேர ஆசிரியர்கள், தொடர்ச்சியாக அவர்களது நிலைப்பாட்டை நாங்கள் தெரிவித்தோம், அதற்கான வெயிட் கொடுத்து மதிப்பீடு தருவதை நாங்கள் வரவேற்கிறோம்.3500 பணியிடங்களை நியமித்துள்ள நிலைப்பாட்டை முழுமையாக, இருக்கின்ற பகுதி நேர ஆசிரியர்கள் அத்தனை பேருக்கும் காலம் முறை ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நாங்கள் வைத்திருக்கிறோம். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு நிகரான ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம்.எனவே வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை நடத்த இருக்கிறோம். சென்னையில் YMCA மைதானத்தில் ஆசிரியர் அரசு ஊழியர்கள் பணியாளர்கள் சார்பில் பெரிய மாநாடு நடத்த உள்ளோம். அன்றைய தினம் அவரிடம் கோரிக்கையும் வைக்க உள்ளோம். சுமார் 2 லட்சத்திற்கும் மேலான ஆசிரியர், அரசு ஊழியர்கள் கூட இருக்கிறோம். கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஆசிரியர் அரசு ஊழியர்கள் திரள இருக்கிறார்கள். முதல்வர் அன்றைய தினம் மேலும் பல இனிப்பான அறிவிப்புகளை அறிவிப்பார் என நம்புகிறோம்.

முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம் வரும் 31 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகளை பெற்று கொடுப்பார்கள் எனவும், அவற்றை 8 ஆம் தேதி உரிமை பெற்ற மாநாட்டில் முதல்வரிடம் வைப்போம்” என்றார்.