☰
×

தமிழ்நாடு அரசுக்கு ஜாக்டோ ஜியோ கண்டனம்..!

 

தமிழ்நாடு அரசுத் துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான ஓஎம்சிஎல் (OMCL) மூலமாக மட்டுமே நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, அக்.21- ஆம் தேதி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், "தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள அரசுத் துறைகளுக்கான மனிதவளத் தேவைகளை முழுமையாகப் பூர்த்திச் செய்யும் முதன்மை முகமையாக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் மூலம் ஆட்களை நியமிக்கும்போது, தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுவது, ஊதியம் முறையாக வழங்கப்படாதது போன்ற புகார்கள் எழுந்த நிலையில், ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்காகவே தமிழ்நாடு அரசு, இத்தகைய புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

புதிய அரசாணை மூலம் சம்மந்தப்பட்ட துறைகள் நேரடியாகவோ அல்லது தனியார் ஏஜென்சிகள் மூலமாகவோ ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்க முடியாது. இனி முழுக்க முழுக்க அரசின் பார்வையில் மட்டுமே ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

ஜாக்டோ- ஜியோ எதிர்ப்பு

"தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மட்டுமே அரசுத் துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்" என்று அரசாணை வெளியிடப்பட்டதற்கு ஜாக்டோ- ஜியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"இந்த அறிவிப்பு 69% இட ஒதுக்கீட்டிற்கான, சமூக நீதிக்கான எதிராக பார்க்கிறோம். அடிப்படை பணியாளர்களை முழுமையாக ஒழித்து கட்டக்கூடிய நடவடிக்கையாக இது உள்ளது. அரசே தமிழ்நாட்டிற்குள் இதுபோல் செயல்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவரை தமிழ்நாட்டில் காத்து வரும் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது. உடனடியாக அரசு இதை திரும்பப் பெற வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் நிரந்தர பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னார்கள்; ஆனால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு 69% இட ஒதுக்கீடு, சமூகநீதி கோட்பாடு அடிப்படையில் நிரப்ப வேண்டும்" என்று ஜாக்டோ- ஜியோ வலியுறுத்தியுள்ளது.