×

வாகன உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்! GPS சாதனங்களின் விலையைக் குறைத்து தமிழக அரசு அதிரடி!

 

தமிழகத்தில் இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பிற இதர வாகனங்களில் பொருத்தப்படும் வாகன கண்காணிப்பு சாதனங்களுக்கு பல்வேறு இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன உரிமையாளர்களிடம் இருந்து புகார்கள் குவிந்தன.

இதனை அடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில், அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வாகன கண்காணிப்பு சாதனங்களின் உற்பத்தியாளர்களுடனான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விரிவான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, AIS-140 தரநிலைக்கு இணங்க வழங்கப்படும் இந்த வாகனக் கண்காணிப்பு சாதனங்கள், தமிழ்நாடு முழுவதும் வெளிப்படையான, தரமான முறையில் ஒரே விலையில் கிடைப்பதை உறுதி செய்ய உற்பத்தியாளர்கள் ஒப்புதலுடன் கட்டணம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன கண்காணிப்பு சாதனம் (ஒரு ஆண்டு சந்தா மற்றும் 2 SIM அட்டைகளுடன்) ஜிஸ்டியுடன் சேர்த்து அதிகபட்சமாக ரூ.5,099 என்றும், கூடுதல் அல்லது மாற்று அவசரப் பொத்தான் (Panic Button): ஒவ்வொரு பொத்தானுக்கும் அதிகபட்சமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.150 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சீராகச் செயல்படுத்த அனைத்து உற்பத்தியாளர்களும் ஒருமனதாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

வாகன உரிமையாளர்களின் நலனைக் காக்கும் வகையில் இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.