×

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'...தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்..!

 

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு 72,633 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு பரிசீலனை செய்து, ஆகஸ்ட் 10-ஆம் தேதி தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

அதில், அரசு ஒதுக்கீட்டில் 35,926 விண்ணப்பங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 3,625 விண்ணப்பங்கள், சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் 26,956 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13 -ஆம் தேதி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெற்றது. அதேபோல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், தகுதியான மாணவா்கள் பொதுப் பிரிவில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் விரும்பும் இடங்களையும் www.tnmedicalselection.org என்ற இணையதளம் வழியே பதிவு செய்தனர்.

முதல் சுற்றில் காலி இடங்கள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். பொதுக்கலந்தாய்வில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 3,019 இடங்களும், சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 90 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 1,865 இடங்களும், தனியார் பல்கலைக் கழகங்களில் 305 இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் பி.டி.எஸ். படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 194 இடங்களும், 1082 இடங்களும் மாநில ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டன.

நிர்வாக ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 1,485 இடங்களும், தனியார் பல்கலைக் கழகங்களில் 2,70 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் 580 இடங்களும், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஒட்டுநர், நடத்துநர் வாரிசுகளுக்கு 30 இடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டன.

முதல் சுற்றில் 9437 இடம் ஒதுக்கீடு

இந்நிலையில், எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,948 இடங்களும், இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரியில் 90 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 3,102 இடங்களும், மாநிலத் தனியார் பல்கலைக் கழகங்களில் 485 இடங்களும் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு அரசு மருத்துவக் கல்லூரியில் 194 இடங்களும், தனியார் மருத்துக்கல்லூரியில் 1,618 இடங்கள் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு ஒடுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2-ஆம் சுற்றுக் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான 2 -ஆம் சுற்றுக் கலந்தாய்விற்கு 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் மாணவர்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்யலாம். இவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் 15-ஆம் தேதி வெளியிடப்படும். 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒதுக்கீட்டு ஆணைகளை எடுத்துச் சென்று கல்லூரியில் சேர வேண்டும்.

எம்பிபிஎஸ் படிப்பில் புதியதாக 250 இடங்கள்

மாதா மருத்துவக்கல்லூரியில் 50 இடங்களும், அருனை மருத்துவக்கல்லூரியில் 50 இடங்களும், காஞ்சிபுரத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள ஏபிஎஸ் மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்களும் என 250 இடங்கள் தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து 2-ஆம் சுற்று கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு, இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று ஏற்கனவே இடங்களை எடுத்த மாணவர்கள், மறு ஒதுக்கீடு கோரி கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 250 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைத்திருப்பதன் மூலம், 250 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

2-ஆம் சுற்றில் காலியிடம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் 2 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 32 இடங்களும், தனியார் பல்கலைக்கழகத்தில் 2 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துக்கல்லூரியில் 2 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 32 இடங்களும் என 70 இடங்கள் உள்ளது.

எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசின் 30 மருத்துவக்கல்லூரியில் 153 இடங்களும், கேகே நகர் இஎஸ்ஐசி கல்லூரியில் 4 இடங்களும், 21 தனியார் மருத்துவக்கல்லூரியில் 795 இடங்களும், 3 தனியார் பல்கலைக் கழகங்களில் 161 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 3 அரசு மருத்துவக்கல்லூரியில் 82 இடங்களும், 19 தனியார் மருத்துவக் கல்லூரியில் 684 இடங்களும் என 1879 இடங்கள் உள்ளன.

நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 21 தனியார் மருத்துவக்கல்லூரியில் 971 இடங்களும், வேலூர் கிருத்துவக் கல்லூரியில் 3 இடமும், தனியார் பல்கலைக்கழகங்களில் 247 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 417 இடங்களும் 1683 இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.