×

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஜாக்பாட்!மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் ..!

 

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் கண்டுகளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீரத்தமிழர்களின் அடையாளமான இவ்விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திராவிட மாடல் ஆட்சியில், வீரம் விளைந்த மதுரை மண்ணில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டிற்கு, எருது விடும் அரங்கம் கட்டிக்கொடுத்திருக்கிறோம். இப்போது ஜல்லிக்கட்டை பார்க்க முதல்வராக வந்திருக்கும் நான், ஏதாவது அறிவிப்பை வெளியிட்டு சென்றால் தான் அனைவருக்கும் திருப்தியாக இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்த வழிவகை செய்யப்படும்.

இரண்டாவது அறிவிப்பாக, ஜல்லிக்கட்டு காளைகளின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பைக் கருத்தில்கொண்டு, அலங்காநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களின் வீரத்தைப் பார்த்துப் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இந்த அறிவிப்புகள் வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் கூடுதல் ஊக்கத்தை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்புகள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.