×

“எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்த ஓபிஎஸ் என்னை ஏமாற்றிவிட்டார்”- ஐயப்பன் கதறல்

 

உசிலம்பட்டி தொகுதியில் திமுக தலைமை அறிவித்த எந்த வேட்பாளராக இருந்தாலும், அவரது வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவேன் என  ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் பேட்டியளித்துள்ளார்.


மதுரை மாவட்டம் செக்கானூரணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பிலும், முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் தலைமையில், அக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உசிலம்பட்டி தொகுதியில் திமுக கூட்டணியில் எந்த வேட்பாளரை நியமித்தாலும், அவரது வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் எனவும் , திமுக தலைமை அதற்கான பணியை எங்களுக்கு வழங்கினால் தனது ஆதரவாளர்களுடன் உசிலம்பட்டி தொகுதி முழுவதும் திமுக வெற்றிக்காக பாடுபடுவோம் எனவும் பேசிய ஐயப்பன் தனது ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அவர்களும் உங்களுடைய கருத்தே, எங்களுடைய கருத்து எனவும், நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு பின்னால் எங்கள் பணி தொடரும் எனவும் உறுதியளித்தனர்.  மேலும் காங்கிரஸ் கட்சியினருக்கு தனது ஆதரவாளர்கள், ஆதரவு அளிக்க வேண்டுமென தரையில் விழுந்து கேட்டுக்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்பன், “உசிலம்பட்டி தொகுதியில் திமுக தலைமை அறிவித்த எந்த வேட்பாளராக இருந்தாலும், அவரது வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவேன். தனக்கு இத்தொகுதியில் சீட் வழங்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தளபதி மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டால் தேர்தல் பணி முழுவதும் எனது ஆதரவாளர்களை கொண்டு செய்து வெற்றிவாகை சூடுவோம். ஓ. பன்னீர்செல்வம் தனக்கு மட்டும் சீட்டு வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். ஒரு கேப்டனாக தொண்டனை கரை சேர்க்க தவறிவிட்டார் ஓபிஎஸ். திமுகவில் நானும் இணைந்தபோது எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக ஓபிஎஸ் உறுதி அளித்த நிலையில், அதிலிருந்து அவர் வாக்கு தவறிவிட்டார்” எனக் குற்றஞ்சாட்டினார்.