×

"இத்தனை வருஷத்துல இப்படி ஒரு அதிகாரியை பார்த்ததில்லை!" -  நெகிழ்ந்த பார் உரிமையாளர்கள்!

 

சென்னை வெப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெருநகரில் செயல்பட்டு வரக்கூடிய நட்சத்திர விடுதிகள், பார்கள் உள்ளிட்டவை குறித்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உடன் பெருநகர சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு பார் உரிமையாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கோயம்பேடு பார் உரிமையாளர் சந்தோஷ் கூறுகையில், "இந்த ஆலோசனையில் எந்த அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். லைசன்ஸ் போன்ற சான்றிதழ் வாங்குவதற்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் காவல் ஆணையர் தெரிவித்தது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு லஞ்சம் தர வேண்டாம் என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. காவல் துறையினர் லஞ்சம் கேட்டால் அவர்கள் மீதே நடவடிக்கை எடுப்பதற்கு புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அரசு அனுமதித்த நேர கட்டுப்பாடுகளை மட்டும் மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரை மட்டுமே எங்களுக்கு நேர கட்டுப்பாடுகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதனை மட்டும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், சட்டத்திற்கு புறமான எந்த விதமான செயலையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

வழக்கமாக பார் விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆணையர் மற்றும் ஐஜி தலைமையான அதிகாரிகள் மட்டும் உரையாற்றுவார்கள். ஆனால் இந்த முறை காவல் ஆணையரே நேரில் எங்களிடம் உரையாற்றியுள்ளார். குறிப்பாக பார் லைசன்ஸ் தொடர்பாக பேப்பர்களை மேல் அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு பணம் கேட்டால் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்" என்றார்.

இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை நேர்மையாக லஞ்சம் எதுவும் பெறாமல் தங்கள் பணிகளை ஆற்றும் போது ஒரு சிலர் செய்யும் தவறுகளால் காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுகிறது.

இதை தடுக்க சென்னை பெருநகர காவல் துறையில் 'ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு' ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் காவல் துறையினர் தங்கள் பணிகளை செய்ய லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் 78717-23000 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ, Whats app மூலமாகவோ அத்தகவல்களை தெரிவிக்கவும் காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் காவல் துறையினர் தங்கள் பணிகளை செய்ய யாரும் எந்த வகையிலும் லஞ்சம் தரவேண்டாம் எனவும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.