தவெகவுக்கு ஆதரவு இல்லை - IUML திடீர் அறிவிப்பு..!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 118 இடங்கள் தேவைப்படும். ஆகையால், தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. எனவே தமிழக வெற்றி கழகம் பல்வேறு கட்சிகளின் ஆதரவை கோரி வருகின்றது.
இதன் அடிப்படையில், முதலில் காங்கிரஸ் கட்சி அதன் ஆதரவை தெரிவித்த நிலையில், தற்போது சிபிஐ, சிபிஎம் என இடதுசாரி கட்சிகள் இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக தவெக-வுக்கு ஆதரவு வழங்கியுள்ளன. இதேபோல், விசிக-வும் விரைவில் தவெக-வுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், ஐ.யு.எம்.எல் கட்சி ஆதரவின் மூலம் தவெகவுக்கான ஆதரவு எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தவெகவுக்கு ஆதரவு இல்லை என ஐ.யூ.எம்.எல் அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், "தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது.
சட்டப்பேரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினுடைய இரண்டு உறுப்பினர்களும் மேதகு ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிக இன்னும் கடிதம் அளிக்காத நிலையில், தவெகவிற்கு தற்போது ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
விஜய் தரப்பிற்கு இருக்கும் கடைசி மற்றும் மிக முக்கியமான நம்பிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை நாளை(அதாவது இன்று) அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட விஜய்க்கு விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மிக அவசியம்.
விஜய்யின் பதவியேற்பு விழாவுக்காகத் தயார் செய்யப்பட்ட நேரு ஸ்டேடியம் தற்போதைய நிலவரப்படி, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன..