×

“நீயாக கேட்பதற்கு பதில் சொல்ல முடியாது... அது வாடகை சோபாதான்”- செய்தியாளரை கடிந்துகொண்ட காதர் மொகிதீன்

 

திமுக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து IUML தலைவர் காதர் மொகிதீன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழக வெற்றி கழக (தவெக) அரசுக்குத் தங்களின் பேராதரவைத் தெரிவித்திருந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி, தற்போது திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகத் தனது பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து IUML தலைவர் காதர் மொகிதீன் அளித்த பேட்டியில், “60 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் பயணித்தோம். தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரவில்லை. எல்லா பக்கமும் விசில் ஊதப்பட்டு, தவெக வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற உன்னத நோக்கிலேயே நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் இந்த அதிரடி முடிவை எடுத்தோம். நாங்கள் எந்தவொரு நிபந்தனையும் இன்றி தவெக-வுக்கு ஆதரவு கொடுத்த போதிலும், நாங்கள் கேட்காத நிலையிலும் தவெக எங்களை மதித்துத் தங்களின் புதிய அமைச்சரவையில் பங்கேற்க அன்போடு அழைப்பு விடுத்தது. இறுதியில் தவெகவிற்கு ஆதரவு என முடிவெடுத்தோம்.

இறுதியில் தவெக-விற்கு முழு ஆதரவு அளிப்பது என்றும், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்றும் தீர்க்கமாக முடிவெடுத்தோம். தவெக ஆட்சி சிறப்பாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்.. தவெக ஆட்சி தொடர்வதற்கு,  உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எல்லா வகையிலும் நாங்கள் ஒத்துழைப்போம். இடைத்தேர்தல், உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல் அனைத்தும் இனி த.வெ.க கூட தான். எங்க முஸ்லிம் லீக் ஆபீஸுக்கு இதுவரை எந்த முதலமைச்சரும் வந்தது இல்லை. விஜய் வருவதாக சொன்னபோது நாங்கள் `வேண்டாங்க.. இது ரொம்ப குறுகலான தெரு' என்றோம். ஆனால் `வந்தால்தான் நல்லா இருக்கும்' என்று அவர் வந்துவிட்டார். அதற்காக இரவோடு இரவாக எங்க அலுவலகத்தை அலங்கரித்தோம். அவரை உட்கார வைக்க வாடகை சோபாதான் வாங்கி போட்டோம். அதை அடுத்த நாள் காலையிலயே வந்து எடுத்துட்டு போயிட்டாங்க சார்” என்றார்.

திமுக கூட்டணியில் இருந்தபோது ஓட்டு கேட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், செய்தியாளரை நோக்கி “சொல்லாததை சொன்னால் எப்படிய்யா? நீயாக கேட்பதற்கு பதில் சொல்ல முடியாது. முட்டாள்தனமாக கேள்வி கேட்காதே” என காதர் மொகிதீன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மூத்த அரசியல் கட்சித் தலைவரான காதர் மொகிதீன் செய்தியாளரை ஒருமையில் பேசி அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.