15 நாள் தான் டைம்..! டெலிகிராமுக்கு மத்திய அரசு அதிரடி கெடு..!
மத்திய அரசு கூறி இருப்பதாவது:
டெலிகிராம் தளத்தில் பரவி வரும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் படைப்புத் துறை, சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க வேண்டும்.அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தியாவில் பதிப்புரிமை மீறல் என்பது வெறும் சிவில் குற்றம் மட்டுமல்ல, அது 1957ம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டம் மற்றும் 1952ம் ஆண்டின் சினிமாட்டோகிராப் சட்டத்தின்படி கடுமையான கிரிமினல் குற்றமாகும்.இதுவரை, அரசு புகார் அளிக்கும் குறிப்பிட்ட சேனல்களை மட்டும் நீக்கும் வழக்கமான முறையை டெலிகிராம் பின்பற்றி வந்தது. ஆனால், இனிமேல் அரசாங்கம் வந்து சொல்லும் வரை காத்திருக்காமல், டெலிகிராம் நிறுவனம் முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு செய்யத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் வழங்கும் பாதுகாப்புச் சலுகைகளை டெலிகிராம் இழக்க நேரிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, திருட்டு உள்ளடக்கங்களைக் கொண்டிருந்த 3,000க்கும் மேற்பட்ட டெலிகிராம் சேனல்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் மத்திய அரசு ஒரு வார காலத் தடையை விதித்திருந்தது. இருப்பினும், தடை காலாவதியான பிறகு, மீண்டும் இந்தியாவில் டெலிகிராம் செயலி செயல்பாட்டுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.