×

அது நான் இல்ல... தெரியாம பேசாதீங்க.. கமிஷனர் ஆபீஸில் கொந்தளித்த லீமா ரோஸின் சகோதரர்..!  

 

அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ செய்தியாளர்களிடம் பேசியதாவது, "யூடியூப்பர் மாரிதாஸ் என்பவர் என்னை பற்றி தவறான அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதில் துளி அளவும் உண்மை இல்லை. நான் கோயம்புத்தூரில் பிளாஸ்டிக் மறுசூழற்சி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னுடைய தங்கை லீமா ரோஸ் லால்குடி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். என்னைப் பற்றியும், என் சகோதரி பற்றியும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் யூடியூப்பர் மாரிதாஸ் என்னை தொடர்பு படுத்தி அவதூறாக பேசியுள்ளார். ஆனால் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஜான் பிரிட்டோ நான் இல்லை. என்னுடைய பேரில் இருக்கும் வேறு ஒருவர் இந்த கடத்தலில் சம்மந்தப்பட்டுள்ளார். எனக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கேரளத்தில் லாட்டரி சம்பந்தமான வழக்கு மட்டுமே என் மீதும், லீமா ரோஸ் மீதும் உள்ளது. அதைத்தவிர வேறு எந்த வழக்கும் இல்லை. இதுபோன்ற போதைப்பொருள் தொடர்பாக எந்த ஒரு வழக்கும் என் மீது இல்லை. நான் தற்போது பாஜக கட்சியில் இருக்கிறேன். என பெயருக்கும், குடும்பத்தினர் பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவல்கள் பரப்பட்டு வருகிறது. இதனால் என்னுடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

என்னை பற்றி அவதூறு தகவல்களை பரப்பி வரும் 51 யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். மேலும், தன்னை பற்றி யூடியூப்பில் வந்துள்ள தவறான பதிவுகளை நீக்க கோரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நான் உடல் நலம் சரியில்லாமல் இருந்து வருகிறேன். இந்த சூழ்நிலையில் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஜான் பிரிட்டோ மகன் கிளிங்டன், " ஒரே மாதிரி பெயர் இருக்கின்ற காரணத்தால் அரசியல் உள்நோக்கத்தோடு இதுபோன்ற தவறான தகவல்களை திமுக ஐடி விங் பரப்பி வருகிறது. என்னுடைய குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.