100 நாள் சாதனை அல்ல.. 100 நாள் வேதனை - வானதி சீனிவாசன் விமர்சனம்..!!
வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
100 நாள் சாதனை அல்ல.. 100 நாள் வேதனை.
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள அரிவாள் கலாசாரம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்பது கவலை அளிக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் காஞ்சிபுரத்தில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை, சிவகங்கை திருப்புவனத்தில் இளைஞர் வெட்டிக் கொலை, ஆட்டோவில் பெண் கொலை, கோவையில் மாணவர் கொலை என அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்கள் தமிழக மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன.
தவெக அரசு பதவியேற்ற 100 நாட்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் நடந்திருப்பது இந்த ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு மீதான அக்கறையை கேள்விக்குறியாக்குகின்றன. இது 100 நாள் சாதனை அல்ல.. 100 நாள் வேதனை. அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில், இன்று ஆயுதங்கள் சர்வசாதாரணமாக புழங்குவதும், கொலைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவின் வெளிப்பாடாகும்.
எனவே தமிழக முதல் அமைச்சர் விஜய் ஆட்சியின் திட்டங்கள், அறிவிப்புகள், விளம்பரங்களை விட முதலில் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் அரிவாள் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.