×

100 யூனிட் அல்ல... 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் - பட்டைய கிளப்பும் தவெக தேர்தல் அறிக்கை..!  

 

 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் களைகட்டியுள்ளன. அனைத்துக் கட்சிகளும், தங்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிக்கைகளை ஏற்கனவே வெளியிட்ட நிலையில், முதன்முறையாக தேர்தல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை மட்டும் வெளியாகாமல் இருந்தது.

இத்தகைய சூழலில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

தவெக தேர்தல் அறிக்கை 2026-ன் முதல் பிரதியை விஜய் வழங்க விவசாயி நாராயணன் என்பவர் பெற்றுக் கொண்டார். அவருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார் விஜய். அவரைத் தொடர்ந்து ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர், தூய்மைப் பணியாளர், காவல் அதிகாரி, மீனவர், கைத்தறி நெசவாளர், திருநங்கை உள்ளிட்டோருக்கு தேர்தல் அறிக்கையின் பிரதிகளை தவெக தலைவர் விஜய் வழங்கினார்.

இவற்றுடன், மருத்துவம் உள்ளிட்ட கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஓரே நாடு ஒரே தேர்தலுக்கான சட்ட முன்வரைவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்,நீட் தேர்வை ரத்து ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளும் தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் வாக்குறுதியை வாசிப்பதற்கு முன்னதாக அதுகுறித்து பேசிய விஜய், “நமது தேர்தல் வாக்குறுதிகாளானது திருக்குறளை வழிகாட்டியாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் மாதிரி ஏமாற்ற மாட்டோம். அதேபோல், மற்ற பலர் மாதிரி அள்ளி விடுகிற அவசர அறிக்கையும் இது இல்லை. ஏனென்றால் 2 பேருடைய தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

ஒருவர் 10 ஆயிரம் கொடுத்தால், இன்னொருவர் 8 ஆயிரத்திற்கு கூப்பன் கொடுக்கிறார். ஒருவர் பிரிட்ஜ் காெடுத்தால், இன்னொருவர் பிரிட்ஜ் வாங்க டோக்கன் கொடுக்கிறார். 2 பேரும் மீனவர்களுக்கு 12 ஆயிரம், 2 பேரும் பெண்களுக்கு 2 ஆயிரம் கொடுக்கின்றனர். 2 பேரும் ஒரே தேர்தல் அறிக்கையை கலரை மாற்றி கொடுத்துள்ளனர். 2 பேரும் வேறு வேறு இல்லை. ஒரு குடையின் கீழ் இருக்கும் கொள்கை கூட்டம் தான். ஆனால் நாம் 2 பேர் மாதிரி ஏமாற்ற மாட்டோம். மக்கள் தான் முக்கியம். அதனால் செய்ய முடிந்ததை மட்டும் தான் சொல்லி இருக்கிறோம்” என்று கூறினார்.

மேலும், தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும்படியும், தனது வேட்பாளர்களும் தானும் வேறு வேறு இல்லை என்றும் கூறிய அவர், மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையின் முக்கிய 10 அம்சங்கள்:

1. ஒவ்வொரு பெண்ணும் அதிகாரமிக்கவர் என்பதை பறைசாற்றும் வெற்றி மகளிர் திட்டங்கள்

  • 60 வயதிற்குட்பட்ட குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மாதம் ரூ. 2,500 போடப்படும்
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்
  • ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ஒரு தரமான பட்டுப்புடவை வழங்கப்படும்
  • 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் தாய் அல்லது பாதுகாவலருக்கு இடைநிற்றலை தடுக்க ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும்
  • பெண்களால் நடத்தப்படும் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லாமல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்

2. உலகத்தரம் வாய்ந்த கல்விக்கான உத்தரவாதம் (Kamarajar Schools of excellence)

  • அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தரமான கல்வியை வழங்கும் இலவச உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும்
  • ஒவ்வொரு பள்ளியிலும் நவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்கப்படும்
  • ஒவ்வொரு தமிழ் மாணவரின் கல்வி கனவுக்கும் ஆதரவளிக்கும் வகையில், இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் உத்தரவாதம் வழங்கப்படும்
  • எதிர்கால திறன் பயிற்சி மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இலவச போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்

3. மக்கள் நலன் பேணும் சுகாதார உத்தரவாதம்

  • போதைப்பொருள் இல்லா தமிழகம்
  • பள்ளி, கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மன்றங்கள்
  • ஒரு குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வரையிலான யுனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ் (புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை, இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சைகளை உள்ளடக்கியது)
  • ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை மற்றும் அனைவருக்கும் மலிவு விலை மருந்து வழங்குதல்

4. இளைஞர்களுக்கு ஏணிப்படிகளாக இருக்கும் உத்தரவாத திட்டங்கள்

  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4 ஆயிரமும், 12 ஆம் வகுப்பு, ஐடிஐ டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 2,500 கொடுக்கப்படும்
  • ஆண்டுதோறும் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரமும், ஐடிஐ டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 8 ஆயிரமும் வழங்கப்படும்
  • தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு ரூ. 25 லட்சம் பிணையில்லா தொழில்முனைவோர் கடனுக்கான உத்தரவாதம் அளிக்கப்படும்
  • ‘முதல்வர் மக்கள் சேவை நண்பன்’ திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டு வாசலிலேயே அரசு திட்டங்களை பெறுவதை உறுதி செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் மாதம் ரூ. 18 ஆயிரம் ஊதியத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
  • அரசுத் தேர்வுகளுக்கான நிலையான ஆள்சேர்ப்பு கால அட்டவணை உருவாக்கப்பட்டு, அதனை முறையாக செயல்படுத்தல் மற்றும் அரசு வேலைகளில் காலி பணியிடங்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

5. உழவர்களின் உள்ளம் மகிழும் திட்டங்கள்

  • 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்படும் அனைத்து பயிர்க் கடன்களும் முழு தள்ளுபடி
  • 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்படும் அனைத்து பயிர்க் கடன்களில் 50% தள்ளுபடி
  • நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,5000 குறைந்தபட்ச ஆதரவு விலை; கரும்பு டன்னுக்கு ரூ. 4,500, தென்னை விவசாயிகளுக்கு கொப்பரை தேங்காய் விலை நிலைப்படுத்தப்படும்
  • குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நேரடியாக ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்
  • 5 லட்சம் இலவச சோலார் பம்ப் செட்டுகள் மற்றும் 100% பயிர் காப்பீடு

6. மீனவர் நலன் காக்கும் மேம்பாட்டு திட்டங்கள்

  • ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 27 ஆயிரம் வழங்கப்படும்
  • பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மீனவருக்கும் ரூ. 25 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும்
  • இந்தியாவில் முதன்முதலாக மீன்களுக்கு சட்டபடியான குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் (மத்தி, கானான் கெளுத்தி, இறால், கணவாய் ஆகியவற்றை உள்ளடக்கியது) செய்யப்படும்
  • அனைத்து மீனவர்களுக்கும் வீடு கட்டித் தரப்படும் லட்சிய திட்டம் கொண்டுவரப்படும்

7. மக்கள் உரிமை, கண்ணியமான வாழ்க்கை மற்றும் சமூக பாதுகாப்பு உத்தரவாதம்

  • முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியமாக மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
  • அரசு நிலத்தில் வீடுகட்டி, வருடக்கணக்கில் சட்டபூர்வமாக மின் இணைப்பு, வீட்டு வரி போன்ற ஆவணங்களுடன் ஆக்கிரமித்துள்ள அனைவருக்கும் பட்டா முறைப்படுத்தப்படும்.
  • அனைத்து வீடுகளுக்கும் 100% குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

8. அரசு ஊழியர்கள் நல உத்தரவாதம்

  • சட்டப்படி முழு பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலணை செய்யப்படும்.
  • 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவமுள்ள அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் தற்காலிக ஆசிரியர்கள், ஒப்பந்த செவிலியர்கள், தற்காலிக எழுத்தர்கள் போன்றோர் முறைப்படுத்தப்படுவர்
  • அங்கன்வாடி ஊழியர் சம்பளம் மாதம் ரூ. 18 ஆயிரமாகவும், சமூக சுகாதார உதவியாளர் சம்பளம் ரூ. 10 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
  • 20 வருட சேவைக்கு பிறகு ரூ. 15 லட்சத்திற்கு ஓய்வூதிய கருணைத் தொகை உத்தரவாதம் வழங்கப்படும்.
  • ஒப்பந்த ஆசிரியர்களுக்கு 5 வருட தொடர்ச்சியான சேவைக்கு பிறகு சம ஊதியம் மற்றும் தாமாகவே பணி நிரந்தரம் ஆக வழிவகை செய்யப்படும்.

9. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்

  • தமிழ்நாட்டின் வளர்ச்சியின் பொற்காலம் என்ற நோக்கில் 2036-க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரம் எட்டப்படும்.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) ரூ. 15 கோடி பாதுகாப்பு ஆதரவு, மின்கட்டண நிவாரணம் மற்றும் ரூ. 50 லட்சம் வரையிலான மேம்பாட்டு நிதி வழங்கப்படும்.
  • அனைத்து பகுதிகளிலும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்யேகமான ஒரு மாஸ்டர் ப்ளான் வகுக்கப்படும்.
  • இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சகம், AI பல்கலைக்கழகம் மற்றும் AI நகரம் ஆகியவை தமிழ்நாட்டை இந்தியாவின் AI தலைநகராக மாற்றும்.
  • அனைத்து முதலீட்டாளர்களாலும் விரும்பப்படுகிற முதலீட்டு இடமாக தமிழ்நாடு மாறும். 21 நாட்களுக்குள் வணிக உரிமம் உத்தரவாதம் மற்றும் தமிழ் புலம்பெயர் முதலீட்டீற்கான சிறப்பு கொள்கை வகுக்கப்படும்.

10. நேர்மையான நல்லாட்சிக்கான உத்தரவாதம்

  • ரேசன் உள்ளிட்ட அரசின் திட்டங்களை வீட்டிற்கே கொண்டு வந்து வழங்க வழிவகை செய்யப்படும்.
  • சாதி சான்றிதழ், நிலப்பட்டா, பிறப்புச் சான்றிதழ் போன்றவை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சட்டப்பூர்வமாக கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்கப்படும்.
  • பொதுமக்களால் நேரடியாக எழுப்பப்படும் பிரச்சினைகளை விவாதிக்க சட்டமன்றத்தில் ஒரு சிறப்பு நாள் ஒதுக்கப்படும்.
  • மாவட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் 10% செலவீனங்களை மக்கள் விருப்பப்படி தீர்மானிக்கப்படும்.