×

என்னையும் என் தந்தை ராமதாசையும் பிரித்தது ஜி.கே.மணி தான் - அன்புமணி ராமதாஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு..!

 

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதி, பா.ம.க., வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து,பா.ம.க., தலைவர் அன்புமணி பிரசாரம் செய்து பேசியதாவது: 

பா.ம.க.,வில் கவுரவ தலைவராக இருந்த, ஜி.கே.மணி அவரது மகன் தமிழ்குமரன் இருவரும், பா.ம.க.,விற்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துள்ளனர். இதுவரை ஒரு முறை கூட அவர்களை பற்றி, நான் பேசியது இல்லை. ஆனால் இன்று, நான் பேசியே ஆக வேண்டும். 

என்னையும், என் தந்தை ராமதாசையும் பிரித்தது, ஜி.கே.மணி தான். நேற்று முன்தினம், தர்மபுரிக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், என்னை பற்றி மிக மோசமாக பேசியுள்ளார். ஒரு முதல்வர் தன்னுடைய, ஐந்தாண்டு கால சாதனைகளை பற்றி பேச வேண்டும். மக்கள் பிரச்னையை பேச வேண்டும். அதை விட்டு விட்டு, என்னை பற்றி மிக மோசமாக பேசியிருக்கிறார். நான் பதிலுக்கு பேசினால் முதல்வர் ஸ்டாலின் தாங்க மாட்டார். என் தந்தைக்கு, என்னை பற்றி பேசுவதற்கு அத்தனை உரிமையும் இருக்கிறது. நான் உங்களை பற்றியும் உங்கள் மகனை பற்றியும் பேசினால், சரியாக இருக்குமா. 

நீங்கள் உங்கள் மகனை வளர்த்த விதத்தை பற்றி, பேசினால், நீங்கள் தாங்குவீர்களா. தமிழகத்தில், உங்களுடைய ஆட்சி அவமானம். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்களுக்கெல்லாம், முதல்வராக இந்த பொறுப்பு எதற்கு? ஸ்டாலினால் நேரடியாக, பா.ம.க.,வை எதுவும் செய்ய முடியாது. அதனால், துரோகிகளை வைத்து, சூழ்ச்சி செய்து எங்களை பிரித்தார். அதனால், தற்போது கூடுதல் பலத்துடன் உள்ளது. ஜி.கே.மணிக்கு, தி.மு.க., பிடிக்கும் என்றால், எப்போதோ நீங்கள், தி.மு.க.,வில் சென்று சேர்ந்திருக்கலாம். யார் உங்களை தடுத்தது.

ஜி.கே.மணி, முதல்வர் ஸ்டாலினின் அடிமை, தமிழ்குமரன் உதயநிதியின் அடிமை. தமிழ்குமரன், காங்.,ல் சேர்ந்தவுடன் அரை மணி நேரத்தில் அவருக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. பென்னாகரம் தொகுதிக்கும், காங்., கட்சிக்கும் என்ன சம்பந்தம். இங்கு, காங்.,க்கு மொத்தமாக, 500 ஓட்டு தான் உள்ளது. இவர் போய், காங்.,கில் சேர்ந்தவுடன், உடனே பென்னாகரம் தொகுதியை இவருக்கு அறிவிப்பார்களாம். ஜி.கே.மணி பென்னாகரத்திலுள்ள, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., நிர்வாகிகளிடம், மொபைலில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஜி.கே.மணி, என் தந்தை ராமதாசிடம் வரும்போது, ஒரு கிழிந்த வேட்டியை கட்டிக்கொண்டு வருவார். 'எனக்கு சொந்தமாக வண்டி கூட இல்லை' என, உருக்கமாக பேசுவார். இப்படி எல்லாம் பேசிப் பேசி இன்று, 2,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகி விட்டார். 

அவ்வாறு இருக்கும்போது, எதற்காக, பா.ம.க.,வுக்கும், இந்த சமுதாயத்திற்கும் துரோகம் செய்தீர்கள். வன்னியர்களுக்கான, 10.5 இட ஒதுக்கீட்டை, தி.மு.க., செயல்படுத்தாமல் போனதற்கு, ஜி.கே.மணி முக்கிய காரணம். தி.மு.க., அரசை கண்டித்து, பெரிய அளவில் போராட்டம் நடத்த முயற்சித்தபோது, முதல்வர் ஸ்டாலினை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, இடஒதுக்கீட்டை செய்து தருவதாக ஒத்து கொண்டதாக, போலியான வாக்குறுதியை சொல்லி, ராமதாசை நம்ப வைத்து, போராட்டத்தை தடுத்தது, ஜி.கே.மணி தான். பா.ம.க., தலைவராக, 25 ஆண்டு காலமாக இருந்தார். ராமதாசிடம் கட்சிகாரர்களை பற்றி, தவறாக பேசி, பேசி பலரை, கட்சியை விட்டு வெளியேற்றினார். நான்கு முறை ஜி.கே.மணியை, பா.ம.க., - எம்.எல்.ஏ.,வாக ஆக்கியிருக்கிறோம். அந்த கட்சியை எதிர்த்து, உங்க மகனை போட்டியிட வைக்கிறீர்கள். தமிழ்குமரன், பண மூட்டைகளை எடுத்துக் கொண்டு வருவார். 1,000 கொடுக்கிறேன், 2,000 கொடுக்கிறேன் என கூறுவார். அந்த பணமெல்லாம் எப்படி சம்பாதிக்கப்பட்ட பணம் என்பது எனக்கு தெரியும். 

இவ்வாறு அவர் பேசினார்.