×

“திருமாவளவன் பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்படுவதாக தெரிகிறது”- ஐகோர்ட்

 

வழக்கறிஞர் மீதான தாக்குதலை தடுக்காமல் பிரச்சனையை தூண்டும் வகையில் திருமாவளவன் செயல்பட்டது போல் தெரிவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த 7-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பாக திருமாவளவன் கார் சென்றபோது வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பவரின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் தரப்பினர், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பவரை கொடூரமான முறையில் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வி.சி.க தலைவர் திருமாவளவன் தரப்பில் இருந்து பார்வேந்தன் என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக BNS 126(2) - யாரையேனும் தவறாகத் தடுத்து நிறுத்துதல், BNS 351(2) - குற்றவியல் மிரட்டல், BNS 352 - அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் அவமதிப்பு, உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அதேபோல வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, தன்னை தாக்கிய வி.சி.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த புகார் அடிப்படையில் அடையாளம் தெரியாத வி.சி.க நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட முழு சம்பவமும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வழக்கறிஞர் மீதான தாக்குதலை தடுக்காமல் பிரச்சனையை தூண்டும் வகையில் திருமாவளவன் செயல்பட்டது போல் தெரிவதாக அதிருப்தி தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்த போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். உயர்நீதிமன்றம் முன்பே தாக்குதல் நடத்தப்பட்டும்கூட காவல்துறையினர் FIR மட்டுமே பதிவு செய்துள்ளது, தாக்குதல் நடைபெற்ற இடத்தை சுற்றி உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை உடனடியாக கைப்பற்ற வேண்டும், குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரத்திற்குள் போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.