×

இதுக்கு அதுவே பரவாயில்லை - கார்ப்பரேட் அழுத்தத்திற்கு குட்-பை சொல்லிவிட்டு ஆட்டோ ஓட்டுநராக மாறிய ஐடி பெண்!

 

பொறியியல் படித்து முடித்த பெரும்பாலானவர்களின் கனவு ஐடி துறைகளில் சேர்வதும், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால், அந்த வேலையில் சேர்ந்த பிறகு ஒரு சிலர் அதில் உள்ள நெருக்கடி காரணமாக பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போதைய ஏஐ காலத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் செய்திகளும் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், பெங்களூரு நகரில் ஐ.டி., துறையில் சாப்ட்வேர் பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவர், அதனை ராஜினாமா செய்துவிட்டு, ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார்.ஐடி துறையில் 9 ஆண்டுகள் பணியாற்றிய அவர், அதில் மேலாளர் நிலைக்கு உயர்ந்தார். எனினும் அதில் உள்ள பணி அழுத்தம் காரணமாக தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே போதுமான நேரத்தை ஒதுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் வேலையை ராஜினாமா செய்தார். பிறகு வாழ்க்கையை சமாளிக்க ஆட்டோ ஓட்ட முடிவு செய்தார்.இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அந்த பெண், மாதம் ரூ.60 ஆயிரம் சம்பாதித்து வருகிறார். 

ஐடி துறையில் இருப்பதை விட தற்போது அதிக மகிழ்ச்சிஉடன் உள்ளதாக அந்த பெண் கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தில் ஐடி துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றிய பிறகும், இமெயில், அழைப்புகளுக்கு உடனடி பதில் மற்றும் நள்ளிரவில் பணி சார்ந்த சிக்கல்களை இன்னும் சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.மற்றொருவர், அந்த பெண் இத்தனை நாட்களில் பணத்தை சேமித்து இருந்தால் அவரது வங்கிக்கணக்கில் 50 லட்ச ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை இருப்பு இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். பலர் அந்த பெண்ணுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.