×

#BREAKING செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு

 

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையிட்டனர். 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக கூறப்படுகிறது.


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் 4-வது கிராஸ் பகுதியில் உள்ள அரசு ஒப்பந்ததாரரும் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராகக் கூறப்படும் எம்.சி.எஸ். சங்கர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அவரது அலுவலகம் மற்றும் வீடு என இரண்டு இடங்களில் அதிகாரிகள் கணக்குப் பதிவுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் செங்குந்தபுரம் மூன்றாவது கிராஸ் பகுதியில் சங்கர் ஆனந்துக்கு சொந்தமான பழைய அலுவலகம் பூட்டி உள்ளதால் வெளியே அதிகாரிகள் நின்று கொண்டுள்ளனர். மேலும் செந்தில் பாலாஜியின் உறவினரான  மணி என்பவருக்கு சொந்தமான ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உணவகம் மற்றும் ராயனூர் பகுதியில் உள்ள அவரது வீடு, அதனைத் தொடர்ந்து கோவை சாலையில் உள்ள கார்த்திக் என்பவருக்கு சொந்தமான சக்தி மெஸ் உணவகம் மற்றும் ஈரோடு சாலையில் உள்ள அவரது வீடு ஆகிய ஏழு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். 

பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் ஆய்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் ‘சிவா டெக்ஸ்டைல்’ உள்ளிட்ட, திமுக வேட்பாளர் பங்குதாரராக உள்ள நிறுவனம், திமுக பிரதிநிதி பாலச்சந்திரன், வி.ஆர். ஜி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று 7 இடங்களில் சோதனை நடப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.