“பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை வந்திருப்பது வேதனையாக உள்ளது ”- ஜி.கே.மணி
பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றாக இணைந்து போராட வேண்டும், மக்களுக்காக போராட வேண்டும். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சிக்குள்ளே போராடுவது வினோதமானது, வேதனை அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி கவுரவ தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டமான இன்று மறைந்த 8 முன்னாள் பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி, “பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பிரிவாக செயல்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிற அதிர்ச்சி அளிக்கிற ஒரு துரதிஷ்ட சம்பவமாக பார்க்கப்படுகிறது.. பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கியவர் சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கி சமூகநீதி பிரச்சனைகள் வன்னியர்கள் உட்பட எல்லா சமுதாயங்களுக்கும் போராடி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி வலிமையான சக்தி, இப்படி ஒரு சோதனை வந்தது வருத்தம் அளிக்கிறது.
அரசியல் கட்சிகளுக்கு சில பிரச்சனைகள் வரும். இந்திய அளவில் மாநில அளவில் பல பிரச்சினைகள் வரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மருத்துவர் ராமதாஸ் அய்யாவுடன் 45 ஆண்டுகள் பயணித்து வருகிறேன். இப்போது நடைபெற்று வருவது துரதிஷ்டவசமானது, வேதனையான விஷயம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. பாட்டாளி மக்கள் கட்சியில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் நியமித்தவர் மருத்துவர் ராமதாஸ். அவருக்குத்தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவரது வழியில் நாங்கள் பயணிக்கிறோம். கட்சியை ஆரம்பித்த மருத்துவர் அய்யாவுக்கு தான் முழு உரிமை உண்டு. பாட்டாளி மக்கள் கட்சி என்பது ஒற்றுமையாக பாடுபட வேண்டும்.. பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றாக இணைந்து போராட வேண்டும்.. மக்களுக்காக போராட வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சிக்குள்ளே போராடுவது வினோதமானது” என்றார்.