'கல்ட் கலாசாரம்' முற்றிலும் அழிய வேண்டும் என்பது என் விருப்பம் - அண்ணாமலை!
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லுாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது:
இன்றைய சமுதாயத்தில், யார் உருவாக்கும் திறனை கொண்டுள்ளனரோ, அவர்களையே உலகம் மதிக்கிறது. எனவே, கிரியேட்டர்களாக, மாணவர்கள் உருவாக வேண்டும். நுாலகங்களுக்கு சென்று புத்தகங்களை படித்து, திறனை மேம்படுத்துவதோடு, விளையாட்டு போன்ற மற்ற திறமைகளையும் மேம்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும். இன்றயை உலகில், பெரிய பிராண்டுகள் நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளன. அவற்றை, நாமே உயர்த்தி பிடித்து, அவற்றுக்கு உள்ளேயே வாழும் நிலைக்கு வந்து விட்டோம்.
அடுத்த 15 ஆண்டுகளில், மிகப்பெரிய பிராண்டுகள், சினிமா நட்சத்திரங்கள், பிராண்டு அம்பாசிடர்கள் ஆகியோரின் தாக்கம் அதிகரிக்கும். அவர்கள் சொல்லும் விளம்பரங்களை நம்பி, சட்டை, பேன்ட், சேலை, அழகு சாதன பொருட்கள் என வாங்குவீர்கள். ஆனால், அவற்றை விளம்பரப்படுத்தும் நடிகைகள், 30 ரூபாய் கிரீம்களை பயன்படுத்த மாட்டார்கள்; வெளிநாடுகளில் கிடைக்கும் உயர்தர அழகு சாதனங்களை பயன்படுத்துவர்.
இதில் இருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டும். இந்த தலைமுறையிலேயே, 'கல்ட் கலாசாரம்' முற்றிலும் அழிய வேண்டும் என்பது என் விருப்பம். மாணவர்கள், தலைமை பண்புகளை வளர்த்துக்கொண்டு, தலைவர்களாக உருவாக வேண்டும். சிறந்த பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, சிந்தனையாளர்களாக உருவாகி, சமுதாயத்தின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.