☰
×

இது அல்லவா உண்மையான காதல் : இறப்பிலும் இணை பிரியாத காதல் தம்பதி..!!

 

சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி (வயது 75). இவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் 46 ஆண்டுகளுக்கு முன்பு குப்புலட்சுமி(68) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சசிகலா(45), சந்திரகலா(43) ஆகிய 2 மகள்களும், சசிகுமார்(42), சரத்குமார் (41), சம்பத்குமார்(40) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

கடந்த 2-ம் தேதி பக்கிரிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கணவரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு செல்ல நேற்று குப்புலட்சுமி தயாராகிக் கொண்டிருந்தார். திடீரென அவர் வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

காதல் கணவரைப் பார்க்கச் செல்ல தயாரான மனைவி, அதற்கு முன்பே உயிரிழந்தது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பக்கிரியும் உயிரிழந்தார்.

காதலித்து திருமணம் செய்து 46 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதியினர், சாவிலும் இணை பிரியாமல் அடுத்தடுத்து உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.