தவெக மீது அதிருப்தியா?- எம்.எல்.ஏ. பதவியை திருப்பி கேட்டது ஏன்?- இசக்கி சுப்பையா விளக்கம்
அதிமுக தலைமை மீதான அதிருப்தியின் காரணமாக ஆறு எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு மீண்டும் சீட்டு வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். மேலும் அவர்களுக்கு கட்சியில் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் அவர்களுக்கும் பொறுப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் நெல்லை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளருமான இசக்கி சுப்பையா எம்எல்ஏ தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகுவதாக புரளி ஒன்று கிளம்பி உள்ளது. அதிமுகவில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சுயநலத்திற்காக போட்ட வழக்கு காரணமாகவே வழக்கு முடியும் வரை தன்னை எம்எல்ஏவாக தொடர செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்ததாகவும், மற்றபடி கட்சியில் எந்த அதிருப்தியும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சுய நினைவுடன் தான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததாகவும், சட்டப்பேரவை தலைவர் என்னுடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ள இசக்கி சுப்பையா, தொகுதியில் எம்.எல்.ஏ இல்லாததால் பணிகள் முடங்கி கிடப்பதாகவும், அதற்காகவே எம்.எல்.ஏ பதவியை கொடுங்க, இல்லை தேர்தல் நடத்துங்க என சொன்னதாகவும் கூறியுள்ளார். அதிமுக தலைமை எனக்கு சரியாக படவில்லை என்றும் அவர் கூறினார்.