உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? இன்று முதல் சரிபார்க்கலாம்..!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் வீடு வீடாக சென்று கணக்கிட்டு படிவங்களை கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் வழங்கி வந்தனர். இந்த கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, 26.90 லட்சம் பேர் இறந்தவர்கள், 13.60 லட்சம் பேர் கண்டுபிடிக்கப்பட முடியாதவர்கள் அல்லது ஆப்செண்ட் ஆனவர்கள், 52.60 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் மாறிச் சென்றவர்கள், 3.98 லட்சம் இரட்டை பதிவுகள் என்று மொத்தம் 97.40 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 40.05 லட்சம் வாக்காளர்களில் 14.26 லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 27.87 லட்சம் வாக்காளர்களில் 7.02 லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாயப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 24.45 லட்சம் வாக்காளர்களில் 5.64 லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாயப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 32 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 51 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் விண்ணப்ப படிவம் 6-யை பெற்று அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஜனவரி 18-ம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். பின்னர், அதுகுறித்த பரிசீலனைகள் நடைபெறும். அதன் பிறகு தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இடம் பெற செய்வார்கள். இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகும்.