தவெக அரசை விமர்சித்ததற்காக இப்படியா? இது பாசிசமா, பாயாசமா? – முதலமைச்சர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!
அருண் ராமின் பதிவை குறிப்பிட்டு, இது பாசிசமா? பாயாசமா? முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் அருண் ராம், தவெகவினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா? என்றும் கடுமையாக சாடி உள்ளார்.
நடந்தது என்ன..?
கடந்த நவம்பர் 16ஆம் தேதி அன்று தவெக அரசை விமர்சித்து Times of India நாளேட்டில் பத்திரிகையாளர் அருண் ராம் 'A Hero's silence, a party's shame' (ஒரு நாயகனின் மௌனம், ஒரு கட்சியின் அவமானம்) என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அருண் ராம் உடன் முதலமைச்சர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அருண் ராம் அவரது பேஸ்புக் பதிவில் நேற்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த Screen Shot புகைப்படங்களுடன் போட்ட பதிவில், "கடுமையான குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை விமர்சித்து நான் கட்டுரை எழுதிய மறுநாளே... சட்ட விதிகளின்படி இந்த பதிவு (ஜூலை 21 அன்று முதலமைச்சரை TOI குழுவினர் சந்தித்த புகைப்படங்கள்) இந்தியாவில் காணக் கிடைக்காது என இன்ஸ்டாகிராமில் ஒரு அறிவிப்பு வந்தது" என குறிப்பிட்டுள்ளார்.