இப்படியும் ஒரு நேர்த்திகடனா..? உடலில் சேறு பூசி, செருப்பால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனூர் கிராமத்தில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த கோவிலில்களின் உற்சவவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவில் அம்மன் வீதிஉலா, பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலை சேத்தாண்டி வேடம் என்ற வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தியது காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.அதன்படி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் முகத்தில் வர்ணப் பொடிகளை பூசி வேடமிட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
அதாவது நேர்த்திக்கடன் செலுத்த விரும்பிய பக்தர்கள், சாமி தரிசனம் செய்து விட்டு தங்களது உடலில் சேறு, கரி ஆகியவற்றை பூசிக்கொண்டு கோவில் முன்பு அமர்ந்திருந்தனர். அங்கு உடைந்த மண் கலையங்கள் (பானை) கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து மாடுகளின் கஞ்சித்தொட்டியில் உள்ள பழைய சாதம் கொண்டு வரப்பட்டு மண் கலையங்களில் ஊற்றப்பட்டது. பின்னர் செருப்பு மற்றும் துடைப்பத்தால் பழைய சாதத்தில் தொட்டு அங்கு அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் அவர்களது உறவினர்கள் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பிறகு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் ஊர்வலமாக சென்று, கோவில் குளத்தில் நீராடினர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், இதுபோன்ற நேர்த்திக் கடனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செலுத்தி வருகிறோம். உடலில் சேறு பூசிக் கொள்வதால், கோடைக்காலத்தில் சரும மற்றும் உஷ்ண நோய்கள் ஏற்படாது. துடைப்பம் மற்றும் செருப்பால் அடி வாங்குவதன் மூலம் சகிப்புத்தன்மை பெருகி, சண்டை சச்சரவுகள் இன்றி வாழ வழி ஏற்படும் என்பது ஐதீகம் என்றனர்.