☰
×

முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து அழுத்தமா?

 

புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் விஜய்க்கு சோனியா அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திக்கு மாநில காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

‘நூல் வெளியீட்டு விழாவுக்குக் கட்டாயம் நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும்' என சோனியா தரப்பிலிருந்து முதல்வர் விஜய்க்குக் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். ஆனாலும், நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் முதல்வர் விஜய் தரப்புக்குக் கடைசிவரை தயக்கம் இருந்ததாம். நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்துகொண்டு, காங்கிரஸோடு படு நெருக்கமாக இருப்பதாகக் காட்டினால், தமிழகத்தில் நடக்கும் த.வெ.க அரசுக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து நெருக்கடிகள் வரலாம் என்று விஜய்க்கு உளவுத்துறை தரப்பில் சொல்லப்பட்டதுதான் தயக்கத்திற்கு காரணமாம் என விகடன் குழுமம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. 

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், "எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை. திருமதி சோனியா காந்தியிடமிருந்து ஒரு அழைப்பு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. திரு.ராகுல் காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது. திரு விஜய் அழைப்பை ஏற்று வந்தார். அதுதான் நடந்த உண்மை. இதை மாற்றி, பொய்யான கதைகளை உருவாக்கி பரப்ப வேண்டாம், JV. Fake News-ஐ தொடர்ந்து பரப்பினால், ஒரு நாள் அந்தப் பொய்யே உங்களை ‘நக்கீரன்’ ஆக்கிவிடும்! உண்மையை எழுதுங்கள். உண்மையை மட்டுமே எழுதுங்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.