×

மாதா மாதம் பட்ஜெட்டில் துண்டு விழுகிறதா..? 50/30/20 ரூலை பயன்படுத்துங்க!

 

பணவீக்கத்திற்கு எதிரான விளைவுகளைச் சமாளிப்பதற்கும், தற்போதைய செலவுகளை ஈடுகட்டுவதற்கும், எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பதற்கும் போதுமான தொகையை வைத்திருக்க வேண்டும். அதற்கு மாதாமாதம் விரிவான பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்கும் போது பல்வேறு செலவுகளுக்கும் சரியான முறையில் நிதியை ஒதுக்காததால் சிலர் நிதி சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

நீங்கள் சிறந்த மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்க விரும்பினால், 50/30/20 விதியைப் பயன்படுத்தலாம்.

மாத சம்பளத்தில் பட்ஜெட்டை உருவாக்குவதில் பெரும்பாலான மக்கள் பிரச்சனையையும் குழப்பத்தையும் எதிர்கொள்கின்றனர். அதற்கு 50/30/20 என்ற விதியைப் பயன்படுத்தலாம். இந்த விதியில் இருக்கும் முதல் 50 சதவீதம் என்பது மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை தேவைகளுக்காக ஒதுக்குவதை குறிக்கிறது. 20% என்பது உங்களுடைய நிதி இலக்குகளுக்காக சேமிப்பதை குறிக்கிறது. 30 சதவீதம் என்பது வாழ்க்கைச் செலவுகளுக்காக நீங்கள் ஒதுக்க வேண்டிய தொகையை குறிக்கிறது.

50/30/20 விதியைப் பயன்படுத்த சம்பள நாளில், நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷம் தொகையை 3 பகுதிகளாகப் பிரிப்பது. அதாவது 50 சதவீதம், 30 சதவீதம் மற்றும் 20% என மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும். இதற்காக உங்களுடைய பணத்தை மூன்று வங்கி கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ஒரு பேப்பரிலோ அல்லது டெஸ்க்டாப்பிலோ நீங்கள் எழுதி வைத்து இதை செய்யலாம்.

உங்கள் சம்பளத்தில் முதல் 50 சதவீதம் உங்கள் தேவைகளுக்காக செலவழிப்பதை குறிக்கிறது. அதாவது வாடகை செலவு, அடமானம் வைத்திருந்தால் அதை மீட்பதற்கான செலவு, கடன் கொடுப்பதற்கான செலவுகள், மருத்துவ செலவுகள் போன்றவை இதில் அடங்கும். சிலர் ஆடை மற்றும் போக்குவரத்து செலவுகளையும் இந்தப் பிரிவில் உள்ளடக்குகின்றனர். உங்களால் இந்த 2 செலவுகளையும் சேர்த்து இந்த பிரிவில் கையாள முடியும் என்று நினைத்தால் தாராளமாக அவற்றை நீங்கள் செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அவற்றை 30 சதவீத தொகையை ஒதுக்கும் வாழ்க்கை செலவின் பிரிவுக்கு கீழ் கொண்டு வரலாம்.

மீதமுள்ள 30% வாழ்க்கை முறை அல்லது பல்வேறு செலவுகளுக்கானது, உணவு, திரைப்பட டிக்கெட்டுகள் அல்லது பிற பொழுதுபோக்கு செலவுகள், ஜிம் கட்டணங்கள், ஷாப்பிங், ஆடை மற்றும் போக்குவரத்து செலவுகள் இதில் அடங்கும். இந்தப் பிரிவின் கீழ் அதிக தொகையை உங்களால் சேமிக்க முடியும். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் எப்பொழுதும் நாம் படம் பார்க்க மாட்டோம். அதேபோல உணவகங்களில் தொடர்ந்து உண்ண மாட்டோம். வெளியில் செல்லும் நாட்களில் மட்டுமே இதுபோன்ற செலவுகள் செய்யப்படுகிறது. எனவே இந்த ஒரு பிரிவின் கீழ் இருக்கும் தொகையை கணிசமாக சேமிக்க முடியும்.

கடைசி 20 சதவீத தொகையை சேமிப்பிற்காக பயன்படுத்தலாம். நீங்கள் கடன் பெற்று இருந்தால் அதை அடைக்கவும் பயன்படுத்தலாம். அதேபோல 50 சதவீத தொகையில் மருத்துவச் செலவுகளையும் நாம் சேர்த்து இருந்தோம். அந்த செலவுகள் இல்லை என்றால் அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஓய்வு மற்றும் எதிர்கால முதலீட்டுக்காக சேமிக்கலாம்.