பொங்கலுக்கு 'கனமழை' இருக்கா..? - வானிலை மையம் 'முக்கிய' அறிவிப்பு..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அப்போது ஒரு வாரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. அதன் பின்னர் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டம், கடலோர மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன் முதல் லேசான சாரல் மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மழைக்கு இடையில் பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு மழை பெய்யுமா? பெய்யாதா? என்ற சிந்தனை பொதுமக்களிடம் மேலோங்கி இருந்தது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 15-ந்தேதி (பொங்கல் பண்டிகை) முதல் 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று (14-01-2026) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.