தமிழ்நாட்டில் முதலீடு சரிவா? போலி தரவுகளை பரப்பும் திமுக..!: ஆவணங்களுடன் தவெக பதிலடி!
2025-26ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (Q4 FY26 - ஜனவரி முதல் மார்ச் வரை), முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் கீழ் தமிழ்நாடு ₹44,036.71 கோடி மதிப்பிலான 183 திட்டங்களைப் பெற்று தேசிய அளவில் 6வது இடத்தில் இருந்தது. இதில் தனியார் துறையின் முதலீட்டுப் பங்களிப்பு மட்டும் 58 திட்டங்கள் மூலம் ₹31,935.37 கோடியாக இருந்தது.
ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மே மாதத்தில் நடிகர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY27) முதலீட்டுப் போக்கில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த காலாண்டில் தமிழ்நாட்டிற்கு வந்த மொத்த புதிய திட்டங்களின் மதிப்பு ₹11,236.73 கோடியாகக் குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 74.48 சதவீத வீழ்ச்சியாகும்.
குறிப்பாக, தனியார் துறை முதலீட்டாளர்களின் அணுகுமுறையில் கடுமையான மந்தநிலை காணப்படுகிறது. தனியார்துறை முதலீட்டு முன்மொழிவுகள் ₹31,935.37 கோடியில் இருந்து ₹7,143.23 கோடியாக, அதாவது 77.63 சதவீதம் சரிந்துள்ளன. மேலும், வெளிநாட்டுத் தனியார் முதலீட்டு முன்மொழிவுகளும் முந்தைய காலாண்டில் இருந்த ₹2,080 கோடியில் இருந்து நடப்பு காலாண்டில் வெறும் ₹720 கோடியாகக் சரிவடைந்துள்ளன. இந்த வீழ்ச்சியின் காரணமாக, தேசிய அளவில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாடு 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என திமுக ஐடி விங் வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொத்துஸ் ஐடி விங் கவனத்திற்கு.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை குறித்து சில உண்மைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முதலில், அந்தக் கட்டுரை முழுவதும் ப்ராஜெக்ட்ஸ் டுடே (Projects Today) என்ற தனியார் இணையதளத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் முழுமையாகவும், தற்போதைய நிலவரத்திற்கேற்பவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை பராமரிக்கும் மாநில அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளே நம்பகமானவை.
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் காலாண்டிலேயே தனது முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) L&T குழுமத்துடன் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ₹18,600 கோடி முதலீடும், 8,200 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக உள்ளது. இதே நேரத்தில், முந்தைய திமுக அரசு தனது முதல் காலாண்டில் (Q1 FY21) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்திடவில்லை என்பது அதிகாரப்பூர்வ பதிவுகளில் உள்ளது. எனவே, தவெக அரசின் செயல்பாடு குறித்த தவறான தகவல்களை பரப்பும் முயற்சிகள் உண்மைக்கு புறம்பானவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
அதுமட்டுமல்ல, திமுக அரசு தனது முதல் ஆறு மாதங்களில் (H1 FY21) மொத்தம் ₹21,021.54 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டது. ஆனால் TVK அரசு வெறும் 50 நாட்களிலேயே அந்த அளவை எட்டும் வகையில் செயல்பட்டுள்ளது. மேலும், 2026 ஜூலை மாதத்தில் Hitachi Energy, Vikram Solar, Chubb, Nordex, MotiveLink, University of Western Australia உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், இதுவரை தவெக அரசு ₹35,062 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இது முந்தைய அரசின் செயல்திறனை ஏற்கனவே கடந்துவிட்டது என்பதையே அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டுகின்றன.
மேலும், 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் முதல் அரையாண்டிற்குள் இந்த முதலீட்டு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன்பிறகு, தவெக அரசின் முதலீட்டு ஈர்ப்பு சாதனை மேலும் வலுவாக வெளிப்படும்.
எனவே, ப்ராஜெக்ட்ஸ் டுடே இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ₹7,143.23 கோடி என்ற முதலீட்டு விவரம் முழுமையற்றதும், தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களுடன் பொருந்தாததுமாகும். முதலீடு தொடர்பான விவரங்களை மதிப்பிடும்போது மாநில அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
கொத்துஸ் ஐடி விங் கவனத்திற்கு.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) August 2, 2026
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை குறித்து சில உண்மைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முதலில், அந்தக் கட்டுரை முழுவதும் ப்ராஜெக்ட்ஸ் டுடே (Projects Today) என்ற தனியார் இணையதளத்தின் தரவுகளை… https://t.co/InspV5i2ev