தி.மு.க., பாணியில் செயல்படும் விஜய் அரசு..? திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை... உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்டது..!!
'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபத்திருவிழா அன்று, தீபம் ஏற்ற வேண்டும்' என, கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அப்போதைய தி.மு.க., அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி, தீபம் ஏற்ற மறுத்தது. இது, கோடிக் கணக்கான ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியது.
கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,தோல்வியை தழுவியது. புதிதாக த.வெ.க., அரசு பதவியேற்றது. தீபத் துாணில் தீபம் ஏற்றும் மேல் முறையீட்டு வழக்கு விசாரணை, கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, தீபத் துாணில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற சில நிபந்தனைகளுடன் கடந்த, 20ம் தேதி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதை மறு ஆய்வு செய்யக்கோரி, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு விசாரணைக்கு வரவில்லை. நேற்று குருநானக் ஜெயந்தியையொட்டி, உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை. அதனால், திருப் பரங்குன்றம் மலை உச் சியில் உள்ள தீபத்துாணில், நேற்று தீபம் ஏற்றப் படுமா அல்லது கடந்த முறை தி.மு.க., அரசை பின்பற்றி, த.வெ.க., அரசும் தீபம் ஏற்றாமல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களாக திருப்பரங்குன்றம் பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. திருப்பரங்குன்றம் முழு பகுதியும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீபத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.இதையடுத்து தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மலை அடிவாரத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக உள்ளிட்ட அமைப்பினர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக "நீங்கள் கூடியிருப்பது சட்டவிரோதமான கூட்டம். உடனே கலைந்து போங்கள், இல்லாவிட்டால் லத்தியால் அடித்து கலைக்க நேரிடும்" என காவல்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
காலங்காலமாக பின்பற்றி வந்த மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அடிப்படையில் மூலவர் சிரசுக்கு நேர் மேல் உள்ள இடமான உச்சிப் பிள்ளையர் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டதாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச்சடங்குகள் மற்றம் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பராம்பரியப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆகமவிதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, திருக்கோவிலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி, மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இவ்விடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது. இத்தகைய நீண்ட காலந்தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள் (Age Old Continued Practices) சமய மரபுகள் மற்றும் சடங்குகள் (Custom and Rituals), ஆகம விதிகள் (Agama rules) ஆகியவை திருக்கோவிலின் தனித்துவமான சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
எனவே, நமது திருக்கோவிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், ஆகம விதிமுறைகள் மற்றும் நிலை பெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச்சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும், அதைத்தொடர்ந்து திருக்கோவில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும், இத்திருக்கோவில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேற்கண்ட அறங்காவலர்குழு தீர்மானத்தின்படி இத்திருக்கோவில் திருக்கார்த்திகை மகாதீபமானது, இத்திருக்கோவில் மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான, மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் இன்று 24.11.2026 மாலை 6 மணியளவில் ஏற்றப்பட்டது என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.