☰
×

தேடப்படும் நபர் முதலமைச்சரின் டிரைவரா? - "இது தூய்மையான ஆட்சி அல்ல, ரீல்ஸ் ஆட்சி"- அதிமுக சாடல்!

 

முதலமைச்சர் விஜய் பங்கேற்ற தாராபுரம் ரோட்ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ரோட்ஷோவுக்கு ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், வெளியூர் மாவட்டப் பொறுப்பாளர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்களை அழைத்து வர வேண்டும் என பணிக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தேர்தல் பிரசாரத்தின்போது, கடந்த 26ஆம் தேதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் இடம்பெற்றுள்ள பலரை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி கைது செய்துள்ளனர். அவர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.

ஆனால், பொட்டிக்காம்பாளையத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் அந்த வழக்கில் இடம்பெற்றுள்ள தேடப்படும் குற்றவாளி. அவர் தற்போது முதலமைச்சர் விஜய்யுடன் வந்து, அவருக்கு மாற்று வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் விஜய் வசம் உள்ள காவல் துறைதான் இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அந்த காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி ஒருவர், முதலமைச்சருக்கு அருகிலேயே அமர்ந்து வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இதுதான் தூய்மையான ஆட்சியா? இதுதான் தூய சக்தியா? தீய சக்தி எது, தூய சக்தி எது என்பதை மக்களே முடிவு செய்யுங்கள்.

காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி ஒருவர், முதலமைச்சரின் அருகில் அமர்ந்து வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்றால், அவர் ஏன் கைது செய்யப்படவில்லை? அப்படியானால், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய் வழக்கா என்ற கேள்வி எழுகிறது. பொய் வழக்கு என்றால், அந்த வழக்கில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த ஆட்சி தூய்மையான ஆட்சி அல்ல. இது ஒரு வேடிக்கையான ஆட்சி, ரீல்ஸ் ஆட்சி' என்று விமர்சித்தார்.