×

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப் படுகிறதா? 

 

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, அந்த இடத்தில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய ஆட்சியின் போது, பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. அதில் முதற்கட்டமாக, ஏறத்தாழ 1,700 ஏக்கர் நிலம் நில உரிமையாளர்களின் சம்மதத்துடன் நேரடியாகக் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய தவெக அரசு விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து வருகிறது. இந்நிலையில், இத்திட்டம் தற்போது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைப் பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், அந்த நிலப் பரப்பில் புதிய சிப்காட் தொழிற் பூங்காவை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அரசுத் தரப்பில் தீவிர மாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமையும் என்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானவுடன். ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் மற்றும் பரந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. சென்னை மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், எதிர்காலத்தில் பெரும் லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில், அங்குள்ள விளை நிலங்களையும் சுற்றியுள்ள இடங்களையும் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கிக் குவித்தன. ஆனால், இப்போது விமான நிலையம் வருவதற்கான வாய்ப்புகள் மங்கி, சிப்காட் தொழிற் பூங்கா வரக்கூடும் என்ற தகவல் பரவியதால், அப்பகுதியில் நிலத்தின் விலை வேகமாகச் சரியத் தொடங்கியுள்ளது. வாங்கிய நிலங்களை அவசரமாக விற்க முடியாமலும், புதிய வாடிக்கையாளர்கள் யாரும் நிலம் வாங்க முன் வராததாலும் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பெருமளவு முடங்கியுள்ளது.