×

உங்கள் குழந்தை குடிக்கும் பால் சுத்தமானதா? கலப்படத்தைக் கண்டறிய உதவும் 5 நிமிட டெஸ்ட்!

 

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டம் சலாய் கிராமத்தில் இயங்கி வரும் 'ஸ்ரீ சத்யா டெய்ரி புராடக்ட்ஸ்' நிறுவனத்தில் பயங்கரமான முறையில் பால் கலப்படம் செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பால் மற்றும் தயிர் தயாரிப்பில் யூரியா, டிடர்ஜென்ட் போன்ற உயிருக்கு ஆபத்தான நச்சு ரசாயனங்கள் கலக்கப்படுவதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில், இந்த கும்பல் வெறும் 300 லிட்டர் அசல் பாலை வைத்துக்கொண்டு, அதனுடன் ரசாயனங்களைச் சேர்த்து 1,800 லிட்டர் வரை பால் தயாரித்தது அம்பலமானது. பாலின் அடர்த்தியை அதிகரிக்கப் பாமாயில், சோயாபீன் எண்ணெய், பால் பவுடர் மற்றும் புரோட்டீன் பவுடர் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். மிகவும் அதிர்ச்சியாக, இந்தக் கலப்படப் பாலை இந்தியாவின் முன்னணி நிறுவனமான 'அமுல்' பாக்கெட்டுகளில் அடைத்து கடந்த 5 ஆண்டுகளாகப் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆலையின் உரிமையாளர் ஜித்தேந்திர படேல் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ராகேஷ் என்பவரைத் தேடி வருகின்றனர். சோதனையின் போது ரூ.71 லட்சம் மதிப்புள்ள ரசாயனப் பொருட்கள் மற்றும் கலப்படப் பால் பறிமுதல் செய்யப்பட்டு, சுமார் 1,370 லிட்டர் பால் அதிகாரிகளால் அழிக்கப்பட்டது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பாலில், லாபத்திற்காக நச்சு ரசாயனங்களைச் சேர்த்து 5 ஆண்டுகளாக விற்பனை செய்த இந்தச் சம்பவம் குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்கவும், இங்கிருந்து பால் விநியோகம் செய்யப்பட்ட இடங்களைக் கண்டறியவும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கலப்படப் பாலை கண்டறிவது எப்படி?

கலப்படம் சோதனை முறை முடிவு
தண்ணீர் ஒரு வழுவழுப்பான சாய்வான தளம் அல்லது கண்ணாடியில் ஒரு துளி பாலை விடவும். பால் மெதுவாக வழிந்து வெள்ளை நிறத் தடத்தை ஏற்படுத்தினால் அது சுத்தமான பால். தடம் இல்லாமல் வேகமாக வழிந்தால் நீர் கலக்கப்பட்டுள்ளது.
டிடர்ஜென்ட் ஒரு பாட்டிலில் 5-10 மிலி பால் மற்றும் சம அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் குலுக்கவும். அதிகப்படியான நுரை பொங்கி வந்தால் அதில் டிடர்ஜென்ட் (சலவைத் தூள்) கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
யூரியா ஒரு தேக்கரண்டி பாலில் அரை தேக்கரண்டி சோயாபீன் அல்லது அரசி மாவு சேர்த்து 5 நிமிடம் வைக்கவும். பிறகு அதில் சிவப்பு லிட்மஸ் காகிதத்தை நனைக்கவும். லிட்மஸ் காகிதம் நீல நிறமாக மாறினால் அதில் யூரியா கலக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ச் (மாவுப்பொருள்) 5 மிலி பாலில் 2 துளி அயோடின் (Iodine) கரைசலைச் சேர்க்கவும். பால் நீல நிறமாக மாறினால் அதில் ஸ்டார்ச் கலப்படம் உள்ளது.
செயற்கைப் பால் பாலை உங்கள் விரல்களுக்கு இடையில் தேய்த்துப் பார்க்கவும். சோப்பு போன்ற வழுவழுப்பான உணர்வு ஏற்பட்டால் அது ரசாயனங்களால் செய்யப்பட்ட செயற்கைப் பால்.